கொரோனா, ஐ.சி.எம்.ஆர், ஆய்வு

புதுடில்லி: இந்தியாவில், கடந்த, இரண்டு மாதங்களாக பரவி வரும், கொரோனா வைரஸ், தன் தன்மையில் மாற்றம் அடைந்துள்ளதா என்பதை அறிய, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

பல்வேறு நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு வந்தவர்களிடம் இருந்து, கொரோனா வைரஸ் பரவியதால், பல்வேறு தன்மைகள் கொண்ட வைரஸ் பரவியிருக்க வாய்ப்புள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

உருமாற்றம்

இந்தியாவில், இதுவரை மூன்று விதமான தன்மை கொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஒன்று, சீனாவின் வூஹான் நகரை சேர்ந்தது. மற்ற இரண்டும், ஐரோப்பிய நாடான இத்தாலி மற்றும் மேற்காசிய நாடான ஈரானை சேர்ந்தவை. ஈரானை சேர்ந்த வைரசும், சீனாவை சேர்ந்த வைரசும், ஒரே மரபணு தொடரை கொண்டுள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக, இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், தன் தன்மையில் உருமாற்றம் அடைந்துள்ளதா என்பதை அறிய, ஐ.சி.எம்.ஆர்., முடிவு செய்து உள்ளது .ஒரு வேளை, உருமாற்றம் அடைந்திருந்தால், அதற்கு தகுந்தாற்போல, தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் மாற்றங்கள் செய்ய, இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என, கூறப்படுகிறது. கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து சோதனையில், ஆறு இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 70 விதமான மருந்துகள் சோதிக்கப்பட்டுள்ளன. 

நம்பிக்கை

அதில், மூன்று மருந்துகள், மனிதர்களிடம் பரிசோதனை நடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து, 2021க்குள், விற்பனைக்கு வந்துவிடும் என, ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.