பாதிப்பைத் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கும்போது விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள ஆசிரியர்களைப் பணிக்க கூடாது. அவ்வாறு செய்தால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க போவதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதன் மாநில பொதுசெயலாளர் ப.மனோகரன் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பரவல் தீவிரம் காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. இப்போதுள்ள நிலையில் மே 31- ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது இத்தோடு நிற்குமா அல்லது இன்னும் தொடருமா என்பது யாருக்கும் தெரியாது. அரசு இதுவரை எந்த ஒரு முடிவும் தெளிவாக எடுத்ததில்லை. நாளுக்கு ஒரு முடிவை அறிவித்து, ஆசிரியர்களையும், மாணவர்களையும், பெற்றோரையும் குழப்பத்தில் வைத்துள்ளது.

பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட எந்த ஓர் அடிப்படை வசதிகளும் முழுவீச்சில் இல்லாத நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி மே 27 ல் தொடங்கும் என அரசு அறிவித்ததுள்ளது. பல ஆசிரியர்கள் வெளியூர்களிலும், மாவட்டம் விட்டு மாவட்டத்திலும், வெளி மாநிலங்களிலும் இருந்து வருகின்றனர்.

கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் மே 26 ம் தேதி பள்ளிக்கு வந்தாக வேண்டும். மேலும் மே 27 ல் அனைத்து ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என அரசு ஆணை வெளியிட்டு உள்ளது. எந்த போக்குவரத்தும் இல்லாத நிலையில், எப்படி பள்ளிக்கு வருவது.

எப்படி விடைத்தாள் திருத்தும்
பணிக்குச் செல்வது.இதற்கிடையில்  பாதிக்கு மேலான ஆசிரியர்கள் பெண்கள். தங்கள் குழந்தைகளை யாருடைய பராமரிப்பிலும் விட்டு வரமுடியாத சூழ்நிலை. இதைப் பற்றி சற்றும் யோசிக்காத கல்வித்துறை, இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது ஆசிரியர்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கி இருக்கிறது.

கரோனா அச்சம் மேலோங்கிய நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி செய்வது ஆபத்தானது. விடைத்தாள்களை பலரும் கையாள வேண்டிய நிலை உள்ளது. கரோனா வைரஸ் காகிதத்தில் 3 முதல் 4 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கும் தன்மை கொண்டது. இதனால் தொற்று பலருக்கும் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த அச்சத்தோடு நுட்பமான பணியான விடைத்தாள் திருத்தும் பணியை எவ்வாறு மேற்கொள்ளுவது. கவனம் சிதையாமல் செய்ய வேண்டிய பணி. மாணவர்கள் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கும் முக்கியான பணி. இதில் கிடைக்கும் மதிப்பெண் அடுத்த கட்ட கல்விக்கு முக்கியம்.

விடைத்தாள் திருத்தும் செயலில் சிறிதளவு மதிப்பெண் வேறுபாடு வந்தாலும்,அதிகாரிகள் முன்பு கைகட்டி பதில் சொல்லவேண்டிய பொறுப்பு, ஆசிரியர்களுக்கு. அத்தோடு சென்னைக்கு அழைத்து விசாரணை மேற்கொள்வதும், தண்டனை வழங்குதும் ஆண்டு தோறும் தொடர்கிறது. இவ்வளவு பொறுப்பான விடைத்தாள் திருத்தும் பணியை, ஊரடங்கு காலத்தில் கொரோனோ அதிகரித்து வரும் நிலையில் தொடங்குவது சற்றும் பொருத்தமற்றது.

இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
ஊரடங்கு நிறைவடைந்த பின் தொடங்க வேண்டும். மேலும், ஆசிரியர்கள் இருப்பிடத்தை கணக்கில் கொண்டு, இவ்வாண்டு மட்டும், தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்க வேண்டும். இதையெல்லாம் அரசு செய்து தராத நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணிக்கும் நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.