சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் வீடுகளுக்கு, பஸ் வசதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

மார்ச், 24ல் நடந்த, பிளஸ் 2 பாடத்துக்கான தேர்வில் மட்டும், ஊரடங்கு காரணமாக, 37 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை; அவர்களுக்கு, ஜூன், 4ம் தேதி தேர்வு நடக்கிறது. அதேபோல், பிளஸ் 1ல், ஒவ்வொரு பிரிவு மாணவருக்கும், ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு, ஜூன், 2ல் நடக்கிறது. பத்தாம் வகுப்புக்கு, ஜூன் 1 முதல், 12 வரை, அனைத்து பாடத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுகளுக்கு, மாணவர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், அரசின் சார்பில், இலவச பஸ் வசதி செய்யப்பட உள்ளது. 

இதற்காக, தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியலை தயாரிக்க வேண்டும். அவர்களின் வீட்டு முகவரிகளை சேகரித்து, அவர்களுக்கான தேர்வு மையத்துக்கு சென்று திரும்ப, பஸ் வசதி செய்யப்பட வேண்டும். 'அதற்கான வழித்தடங்களை தயாரித்து, கல்வி அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.