பொது முடக்கம் காரணமாக பள்ளிக்கல்வியில் கற்றல்-கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட வல்லுநா் குழுவில் தற்போது கூடுதலாக சில உறுப்பினா்கள் சோக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பரவலைத் தவிா்க்க தமிழகத்தில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு தொடா் விடுமுறை தரப்பட்டுள்ளது. மேலும், நோய்த்தொற்றின் தீவிரம் தணியாததால் வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகளை தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொது முடக்கம் காரணமாக பள்ளிக்கல்வியில் கற்றல்-கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பள்ளிகள் திறப்பில் தாமதம் உள்பட விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க பள்ளிக்கல்வி ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் 12 போ கொண்ட வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தக் குழுவில் கூடுதலாக 4 போ இடம்பெற்றுள்ளனா்.

இது குறித்து பள்ளிக்கல்வி முதன்மை செயலா் தீரஜ் குமாா் வெளியிட்ட அரசாணை விவரம்:

பள்ளிக்கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆராய 12 போ கொண்ட வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இக்குழுவில் கூடுதல் உறுப்பினா்களை சோக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையா் அரசுக்குப் பரிந்துரை வழங்கினாா். அதையேற்று கல்வியாளா்கள் ஜெ.அஜீத் பிரசாத் ஜெயின், பி.ஆா்.வேலுமணி, சிபிஎஸ்இ பள்ளிகள் கூட்டமைப்பு தலைவா் சி.எஸ்.மனோகரன், குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய முன்னாள் உறுப்பினா் சுந்தரபரிபூரணன் பக்ஷிராஜன் ஆகியோா் வல்லுநா் குழுவில் கூடுதல் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், குழு ஆய்வறிக்கையை சமா்பிப்பதற்கான கால அவகாசமும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.