கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, பணியிடங்களில் ஊழியர்கள் எச்சில் துப்பினால் அபரதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை மத்திய அரசின் அனைத்து துறைத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டு, அதைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது
மத்திய அரசின் உத்தரவு அரசு அலுவலகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் நிச்சயம் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தும். மத்திய அரசு ஊழியர்கள் பான் மசாலா, குட்கா மென்று சுவர்களிலும், சுவரின் மூலைகளிலும் துப்புவது இனிமேல் தடுக்கப்படும்.
இதுகுறித்து வெளியிட்ட உத்தரவு:
“பொது இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் எச்சில் துப்புவது அபராதத்துக்குரிய தண்டனையாகும். மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச உள்ளாட்சி நிர்வாகங்கள், இது தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தலாம். பணியிடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

பணியிடங்கள், கடைகள், அலுவலங்கள், சந்தைகள் போன்றவற்றில் வேலை நேரம் முறைப்படி பராமரிக்க வேண்டும். பணியாளர்கள் வரும்போது அவர்களுக்கு தெர்மல் பரிதோனையும், நுழைவாயில், வெளியேறும் பகுதியில் சானிடைசர் வைக்க வேண்டும்.

பணியிடங்களைக் குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்தல், குறிப்பாக மனிதர்கள் அதிகமாகத் தொடும் இடமான கதவின் கைப்பிடி போன்றவற்றை அடிக்கடி சுத்திகரிப்பான்களால் துடைக்க வேண்டும்.
பணியிடங்களில் ஊழியர்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடித்து பணியாற்றுகிறார்களா, உணவு நேரத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதைப் பொறுப்பு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்”.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அலுவலங்களில் இளநிலைப் பணியாளர்கள் 50 சதவீதம் பேர் பணிக்குத் திரும்ப வேண்டும். இருப்பினும், அலுவலகத்தில் 33 சதவீதம்அளவுக்கு ஊழியர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்ற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.