red_zone,orange_zone,green_zone,India,சிவப்பு,ஆரஞ்சு,பச்சை,மண்டலம்,
புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், பாதிப்பு, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிறம் என, நாடு முழுதும் உள்ள பகுதிகளை மூன்று மண்டலங்களாக மத்திய அரசு பிறப்பித்துள்ளது. 

பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்தில், 130 மாவட்டங்களும், பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலத்தில், 284 மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன. கடந்த, 21 நாட்களில், புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படாத பச்சை நிற மண்டலத்தில், 319 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நம் நாட்டிலும் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு, நாளையுடன் முடிவுக்கு வருகிறது. 

இதையடுத்து, ஊரடங்கை எந்தெந்த பகுதிகளில் நீட்டிப்பது, எந்தெந்த பகுதிகளில் தளர்த்துவது என்பதை வரையறை செய்வதற்காக, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என, நாடு முழுதும் உள்ள பகுதிகளை, பாதிப்பு அடிப்படையில் மூன்று பகுதிகளாக பிரிக்கும் நடவடிக்கையை, மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டது.இந்த பணி, தற்போது முடிவடைந்துள்ள நிலையில், மூன்று மண்டலங்களில் இடம் பெற்றுள்ள மாவட்டங்களை அட்டவணைப்படுத்தி, அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை

மத்திய சுகாதாரத் துறை செயலர் ப்ரீத்தி சுதன், இது குறித்து, அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்; அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு பகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுடன், மத்திய அமைச்சரவை செயலர், சமீபத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், வைரஸ் பாதிப்பு இரட்டிப்பாகும் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில், 'ஹாட்ஸ்பாட்' எனப்படும், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு வந்தன. தற்போது, வைரஸ் பாதிப்பிலிருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. 

இதையடுத்து, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருவோர், பாதிப்பு இரட்டிப்பாகும் விகிதம், பரிசோதனை, குணமடைந்து வீடு திரும்பியோர், கண்காணிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என, நாடு முழுதும் உள்ள பகுதிகள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில மாவட்டங்களை சிவப்பு மண்டலத்தில் இடம் பெறச் செய்யும்படி, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

நாட்கள் குறைப்பு

இதன் அடிப்படையில், வாரந்தோறும் திருத்தம் செய்யும் விதமான பட்டியல் வெளியிடப்படுகிறது. பாதிப்பு, ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில், கூடுதலாக சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலங்களை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே அறிவித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில், மத்திய அரசு வெளியிட்டுள்ள மண்டலங்கள் தொடர்பான பட்டியலில் எந்த மாற்றத்தையும், மாநில அரசுகள் மேற்கொள்ளக் கூடாது. 

ஒரு மாவட்டத்தில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகள் இருந்தால், அவற்றை தேவையின் அடிப்படையில், தனித் தனி மண்டலங்களாக பிரித்துக் கொள்ளலாம். கடந்த, 21 நாட்களில், ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத பகுதிகள், பச்சை மண்டலத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, சிவப்பு மண்டலத்திலிருந்து பச்சை மண்டலத்துக்கு மாறுவதற்கான அளவு, 28 நாட்ளாக இருந்தது; அது தற்போது, 21 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

இந்த பச்சை மண்டலத்தில், 319 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலத்தில், 284 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்தில், 130 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. சிவப்பு மண்டலங்களில் இடம் பெற்றுள்ள மாவட்டங்களில், 28 நாட்களாக, எந்த புதிய பாதிப்பும் ஏற்படவில்லை எனில், அது, பச்சை மண்டலத்துக்கு மாறும். அதேபோல், ஆரஞ்சு மண்டலத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டங்களில், 14 நாட்களாக, எந்த புதிய பாதிப்பும் ஏற்படவில்லை என்றால், அவையும் பச்சை மண்டலத்துக்கு மாறும். 

கண்காணிப்பு அவசியம்

சிவப்பு மண்டலங்களில் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கான சேவைகளை அனுமதிக்கலாம். இதன் மூலம், வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு அவசியம். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை தவிர, வேறு எந்த பொருட்களையும் இந்த பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது. 

சிறப்பு குழுக்கள் அமைத்து, வீடு வீடாகச் சென்று, வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களை, தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

எந்த மாநிலத்தில் பாதிப்பு அதிகம்?

* தமிழகத்தில், 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும் இடம் பெற்றுள்ளன. 

* கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும், எந்த புதிய பாதிப்பும் ஏற்படாத பச்சை மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது.

* சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட எட்டு மெட்ரோ நகரங்களும் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.

* டில்லியில் உள்ள, 11 மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன.

* மஹாராஷ்டிராவில், 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், 16 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும், ஆறு மாவட்டங்கள் பச்சை மண்டலத்திலும் இடம் பெற்றுள்ளன.

* குஜராதில், சிவப்பு மண்டலத்தில், ஒன்பது; ஆரஞ்சில், 19; பச்சையில், ஐந்து மாவட்டங்கள் உள்ளன.

* மத்திய பிரதேசத்தில், சிவப்பில், ஒன்பது; ஆரஞ்சில், 19; பச்சையில், 24 மாவட்டங்கள் இடம் பிடித்துள்ளன.

* ராஜஸ்தானில், சிவப்பில், எட்டு; ஆரஞ்சில், 19; பச்சையில், ஆறு மாவட்டங்கள் உள்ளன.

* உத்தர பிரதேசத்தில், சிவப்பு மண்டலத்தில், 19; ஆரஞ்சில், 36; பச்சையில், 20 மாவட்டங்கள் இடம் பிடித்துள்ளன.

* கோவா மற்றும் வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் ஆகியவற்றில், அனைத்து மாவட்டங்களுமே பச்சை மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன. .

* புதுச்சேரி, அசாம், ஹிமாச்சல பிரதேசம், மேகாலயா, திரிபுரா ஆகியவற்றில், எந்த மாவட்டமும், சிவப்பு மண்டலத்தில் இடம் பெறவில்லை.

அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

ஊரடங்கு காலம், நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், பிரதமர் மோடி, நேற்று ஆலோசனை நடத்தினார். வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். 

இதில், ஊரடங்கு காலம் முடிந்த பின், போக்குவரத்தை மீண்டும் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிவப்பு மண்டலத்தில் இடம் பெறாத பகுதிகளில், போக்குவரத்தை மீண்டும் துவக்கினால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான இறுதி முடிவை, இன்று அல்லது நாளை, பிரதமர் மோடி அறிவிப்பார் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.