கொரோனா நோய்ப் பரவலை தடுக்க மார்ச் 15 முதல் காலவரையின்றி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதில் தெளிவற்ற நிலை காணப்பட்டாலும், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்க அதிக வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.

அவ்வாறு பள்ளிகள் திறக்கப் படும் போது, அரசுப் பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளில் கீழ்க்கண்ட எவற்றையெல்லாம் நடைமுறைபடுத்த வாய்ப்பு உண்டு என்பது கேள்விக் குறியே?

👉 தினமும் தூய முகக் கவசம் அணிந்து வருதல்.
முகக் கவசத்தை தொடாதிருத்தல். முகக் கவசத்தை சரியாக பொருத்தி, மூக்கிலிருந்து கீழிறங்காமல், காலை முதல் மாலை வரை பேணுதல்.

👉 அடிக்கடி சோப்பு அல்லது ஹேண்ட் வாஷ் மூலம் கைகளை 20 வினாடிகளுக்கு குறையாமல் கழுவுதல். தற்போது கோடைக்காலம் என்பதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்திருக்கும். இந்த சூழலில் மாணவர்கள் குடிப்பதற்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், அடிக்கடி கை கழுவுதல் எவ்வாறு சாத்தியமாகும்? இதற்கான தண்ணீரும், போதுமான கால அவகாசமும் உள்ளதா?

👉 பல பள்ளிகளில் கழிப்பறை சுகாதாரம் சரிவர பேணப்படுவதில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம் பயிலும் பள்ளிகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாததாலும், சுகாதாரம் இல்லாததாலும், பல மாணவிகள், பள்ளிக் கழிப்பறையை பயன் படுத்தாமல், வீட்டிலிருந்து கிளம்பி மீண்டும் வீடு வந்து சேரும் வரையில் இயற்கை உபாதைகளை அடக்கிக் கொண்டிக்கிறார்கள். இதற்காகவே தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்கிறார்கள். கொரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ள நிலையில், பள்ளிக் கழிப்பறைகளில் எவ்வாறு சுகாதாரத்தை பேணப் போகிறோம்?

👉 பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையில் 2 மீட்டர் சமூக இடைவெளி என்பது, பள்ளி தொடங்கும் நேரம் முதல் முடியும் நேரம் வரை எவ்வாறு பின்பற்ற முடியும்? குறிப்பாக தொடக்கப் பள்ளி மாணவர்கள் இதில் கவனமாக இருப்பார்களா? இருக்க முடியுமா?

👉 கைகளைக் கழுவாமல், கண், மூக்கு, வாய்ப் பகுதிகளை தொடக் கூடாது என மருத்துவர்கள் சொன்னாலும், தொடக்கப் பள்ளிகளில் இது எவ்வாறு சாத்தியப் படும்?

👉 தொடக்கப் பள்ளிகளில் தற்போது குழந்தை நேயக் கற்றலின் அடிப்படையில் பாடங்கள் கற்பிக்கப் படுகிறது. வட்டமாக தரையில் அமர்ந்து குழுவாக பயில்வர். இந்த குழுவில் ஆசிரியரும் இருப்பார். குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் சமூக இடைவெளி 2 மீட்டர் அளவு இல்லா விட்டாலும், 1 மீட்டர் இடைவெளி என்பது ஓரளவு சாத்தியப்படும். அதிக மாணவர்கள் கொண்ட வகுப்பறைகளில் சமூக இடைவெளி எவ்வாறு சாத்தியமாகும்?

👉 சீன நாட்டுப் பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வரும் போதே, வாயிலில் காலணிகளுக்கு, கைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப் படுகிறது. முகத்தையும் இயந்திரங்கள் மூலம் தூய்மை படுத்துகின்றனர். நமது பள்ளிகளில் இது எவ்வாறு சாத்தியப்படும்?

👉 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கக் கூடியவர்கள். ஏனென்றால், மாணவர்கள் அருகில் இருந்து கற்றுக் கொடுத்தால் தான், எழுத்துக்களின் உச்சரிப்பு ஒலி வடிவம், வரிவடிவம் இவற்றை மாணவர்கள் புரிந்து கொள்ள முடியும். தவறுகளை ஆசிரியரால் திருத்த முடியும். 2 மீட்டர் சமூக இடைவெளியால் இது எப்படி சாத்தியமாகும்? 

👉 இப்போதைய இயந்திர வாழ்க்கை முறையில், பெரும்பாலானோர் 30 வயதிலேயே உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதில் ஆசிரியர்களும் அடக்கம். பெரும்பாலும் குழந்தைகள் கொரோனா நோயினால் பெருமளவு பாதிக்கப் படுவதில்லை என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் குழந்தைகள் கொரோனா வைரசை பரப்பும் ஏதுவாளராக உள்ளனர் என்பதை இத்தாலி போன்ற ஐரோப்பிய நாட்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய், சுவாசக் கோளாறு, சிறு நீரக பாதிப்புக் கொண்ட ஆசிரியர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்?

👉 சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பது இயல்பு. இது சாதாரண சளியா? அல்லது கொரோனா பாதிப்பால் வந்த சளியா? என்பதை ஆசிரியரால் எவ்வாறு கண்டறிய முடியும்? கண்டறியும் முன்பே பலருக்கு பரவும் ஆபத்தும் உள்ளதே?

👉 பெரும்பாலான கிராமத்து குழந்தைகளின் பெற்றோர், தினக்கூலிகளாக பல்வேறு இடங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள். அவ்வாறு செல்லும் போது, ஏதேனும் ஒரு பெற்றோர் பாதிக்கப்பட்டு, அவர் மூலம் பள்ளி மாணவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு, அம் மாணவர் மூலம் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இதன் மூலம் பள்ளி சார்ந்த ஊர் முழுக்க சமூகத் தொற்றாக மாற வாய்ப்பு உண்டு. இந்த நிலையை எவ்வாறு தடுக்க முடியும்?

👉 கொரோனா வைரஸ் மறைமுகமாக கைகளில் தொற்ற வாய்ப்புண்டு. அதாவது பள்ளிச் சுவர், தரை, பேனா மற்றும் பென்சில் பரிமாற்றம், முகம் மட்டுமின்றி கை, கால்கள், பாதங்கள், தலைமுடி, உடைகள், மாணவர்களின் புத்தகப்பை உள்ளிட்ட பொருள்களில் படிந்திருக்க வாய்ப்புண்டு. அப்படி படிந்திருக்கும் நிலையில், மாணவர் அந்த இடங்களைத் தொட்டு விட்டு, கவனக் குறைவாக அம்மாணவர் தன் முகத்தைத் தொடும் போது, கொரோனா வைரஸ் உடலுக்குள் செல்ல வாய்ப்புண்டு. ஆகவே இப்பொருள்களை தினந்தோறும் கிருமி நாசினிகளால் தூய்மை படுத்துவது என்பது முடியுமா?

👉 பெரும்பாலான ஆசிரியர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி பணிக்கு வரக் கூடியவர்கள். காலை நேர பரபரப்பில், பொதுப் போக்குவரத்தில் சமூக இடைவெளி என்பது நடைமுறைக்கு பொருந்துமா?

👉 இது தவிர, கற்றல் - கற்பித்தலில், கடந்த சில ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட பதிவேடுகள் பராமரித்தல் மற்றும் கற்றல் இலக்குகளிலிருந்து எவற்றை தவிர்த்து, எவற்றிற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற வினாவும் நம் முன் எழுகிறது.

👉 கொரோனாவுடன் வாழப் பகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று உலக சுகாதார நிறுவனமும், அரசும் கூறி விட்ட நிலையில், கற்றல் - கற்பித்தலில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப, புதிய இலக்குகளும், கற்பித்தல் முறையில் புதிய மாற்றங்களும் தேவை.