'ஆன்லைன்'மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ.,வழிமுறைகள்

புதுடில்லி,:ஊரடங்கால், வீட்டில் இருந்தபடியே, 'ஆன்லைன்' மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.


ஊரடங்கு காரணமாக, நாடு முழுதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன; அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவ - மாணவியருக்கு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆன்லைன் பாதுகாப்பு குறித்து, மாணவ - மாணவியருக்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம், நேற்று சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
* மாணவர்கள், ஆன்லைன் மூலம் நட்பை பெறுவதிலும், நண்பர்களுடன் கலந்துரையாடுவதிலும் சில வரம்புகள் இருக்க வேண்டும். பிறருக்கு பகிரும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றில் கவனம் தேவை.* புகைப்படங்கள், 'வீடியோ'க்கள் என, எதை பகிர்ந்தாலும், அதில் வரம்பு இருக்க வேண்டும். மாணவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்டவை, தவறான நபர்களிடம் கிடைத்தால், அவை தவறாக பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அது, சம்பந்தப்பட்டவரை பெரிதும் பாதிக்கும்.
* பாலின உறவுகளை, மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாணவியரிடம் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் மாணவர்கள் பேச வேண்டும். * சமூக வலைதளங்களில், அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து அழைப்பு வந்தால், அதை ஏற்கக் கூடாது. ஆன்லைனின் பழக்கமானோரில் யாரேனும், புகைப்படங்கள், வீடியோக்களை கேட்டால், அவர்களுடன் தொடர்பை துண்டிக்க வேண்டும். அவர்கள் கேட்கும் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ அனுப்பினால், அவற்றை சமூக வலைதளங்களில் பரப்பும் அபாயம் உள்ளது. அதை வைத்து, அவர்கள் மிரட்டுவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.