ஓய்வு பெறும் வயது வரம்பு அதிகரிப்பு: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்
தமிழகத்தில் நிரப்பப்படாமல் நிலுவையிலுள்ள 4.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் அரசு ஊழியர்களின் முறையான சலுகைகளை வழங்காமல் தொடர்ந்து அரசு வஞ்சித்து வருகிறது.
ஓய்வு பெறும் வயது வரம்பு அதிகரிப்பு: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்


அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 வயதிலிருந்து 59 ஆக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அரசு ஊழியர்கள் 15க்கும் மேற்பட்டோர்  சமூக இடைவெளியுடன்  முகக் கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அரசுக்கு எதிராகவும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரித்து அரசாணை வெளியிட்டதைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் நம்பிராஜன்
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்தே, முன் வரிசையில் இருந்த அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.


அரசிற்கு முதலில் தங்களின் ஒருநாள் ஊதியத்தை  நிதியாக  அளித்ததும் அரசு ஊழியர்கள் தான். இப்படி இருக்கும்போது அரசு ஊழியர்களுக்கு எதிராகவே தமிழக அரசு ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் நிரப்பப்படாமல் நிலுவையிலுள்ள 4.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் அரசு ஊழியர்களின் முறையான சலுகைகளை வழங்காமல் தொடர்ந்து அரசு வஞ்சித்து வருகிறது. மேலும் தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டித்து உத்தரவு அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 80 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கும் நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க அவசியமென்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.