vikatan_2020-05_5e20d35b-f8c0-4bd4-9fb2-3d2f21ca7a81_20200521_162526நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் புதிதாகச் சேர உள்ள மாணவ, மாணவிகள் ‌மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஊரடங்கை மீறி கடந்த சில தினங்களாக ரகசியமாக நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதாக மாவட்ட அதிகாரிகளுக்குத் தகவல் வந்தவண்ணம் இருந்தது.

தனியார் பள்ளி

தகவலின் அடிப்படையில் அந்தப் பள்ளிக்கு நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர் மாஸ்க் அணிந்தபடி நுழைவுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்தார்.


இந்தச் சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ``எங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில் ரகசியமாக நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வினாத்தாள்

முதற்கட்டமாகப் பள்ளி வளாகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றிப் பூட்டியுள்ளோம். தொடர் விசாரணைக்குப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். இந்த விவகாரம் குறித்துப் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட முயற்சி செய்தோம். அவர்கள் நம்மிடம் பேச மறுத்துவிட்டனர்.

private school

அதிகாரிகளின் விசாரணையில், இந்தப் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தும் மையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கட்டணம் வசூலிப்பதே பெரும் குற்றமாகக் கருதப்படும் நிலையில் அதற்கு ஒருபடி மேலே போய் அடுத்த கல்வியாண்டுக்கு நுழைவுத்தேர்வு நடத்திக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் அதிகாரிகள்.