பள்ளிகள் திறப்பு எப்போது ?:ஆலோசனை குழு அமைத்தது அரசு

சென்னை : புதிய கல்வி ஆண்டில், பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க, கல்வி அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னையால், தேர்வுகள் தாமதமாக நடத்தப்படுகின்றன. புதிய கல்வி ஆண்டில், பள்ளிகள் துவங்குவதும் தள்ளிப் போகலாம். 


எனவே, பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கவும், பாடங்களை தொழில்நுட்ப ரீதியாக நடத்தும் முறைகளை கண்டறியவும், ஆலோசனை குழு அமைத்து, பள்ளி கல்வி முதன்மை செயலர், தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.


உத்தரவில், அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா பிரச்னையால், கற்றல், கற்பித்தல் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அவற்றுக்கு தீர்வு காணும் முறைகளை கண்டறிய வேண்டும்.
புதிய கல்வி ஆண்டை, துவங்குவது தாமதமாகும் என்பதால், எப்போது பள்ளிகளை திறப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். இடைபட்ட காலத்தை, மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.ஆசிரியர், மாணவர் இடைவெளியை குறைத்து, தொழில்நுட்ப வழியில் பாடங்களை நடத்தும் முறைகளை கண்டறிய வேண்டும். 


இதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்காக ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது.பள்ளி கல்வி இயக்குனர், தொடக்க கல்வி, மெட்ரிக் பள்ளி, தேர்வு துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்கள், அனைவருக்கும் கல்வி திட்ட துறை, கல்வி தொலைக்காட்சி, பெற்றோர் ஆசிரியர் கழகம், யுனிசெப், தமிழக இ - சேவை, சென்னை ஐ.ஐ.டி.,யின் தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள், இந்த குழுவில் இடம் பெறுவர்.இந்த குழுவினர், ஆய்வுகளை விரைந்து முடித்து, முடிவுகளை அரசுக்கு அறிக்கையாக,15 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார்.