கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களில் இந்நேரம், ஆண்டு இறுதி தேர்வுகள் தொடங்கி இருக்கும். கல்லுாரி படிப்பின் இறுதியாண்டில் இருப்போர், அடுத்து என்ன என, ஆய்வுச் செய்ய வேண்டியநிலையில் இருப்பர். 

அவர்களை முடக்கியுள்ளது, கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு.தொடக்க கல்வி முதல், உயர் படிப்புகள் வரை, முடங்கியுள்ள இந்தச் சூழலில் இருந்து விடுபட, மாணவர்களும், ஆசிரியர்களும், சற்று மாற்றி சிந்தித்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தொடர் வாசிப்புகள், ஆய்வுகள், கருத்தரங்கம், பயிலரங்கம் என, அறிவை விருத்தி செய்து கொண்டிருக்க வேண்டிய ஆசிரியர்கள் முடங்கியுள்ளனர். மீட்டுருவாக்கம் இதைத் தீர்க்கும் வகையில், இணையவழி கற்றல் - கற்பித்தலை ஊக்கப்படுத்தி, அதன் வழி ஆய்வுகள், கருத்தரங்கம், பயிலரங்கம் போன்றவைகளை மீட்டுருவாக்கம் செய்ய முடியும்.அந்த வகையில், மாணவர்களும், ஆசிரியர்களும், இணையவழிக் கல்வி மூலம் இணைய வேண்டியது, காலத்தின் கட்டாயமாகும். தற்போது, பல வகையான தொழில்நுட்பங்கள் உள்ளன. இந்த நுட்பம், கைப்பேசி, கணினி மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள் ஆகிய அனைத்திலும் அடங்கும். பல வழிகளில், இன்றைய கற்றல் - கற்பித்தல் விரிவடைந்துள்ளது.
இதை, அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் பயன்படுத்த வேண்டும். அதற்கான முன் முயற்சிகளை கல்லுாரிகளும், பல்கலைக் கழகங்களும், முன்னெடுத்து, மாணவர்களையும், ஆசிரியர்களையும் தயார் செய்ய வேண்டும்.கற்றல் - கற்பித்தல்காலத்திற்கு தகுந்தார் போல், கல்வியை வழங்க, நவீன தகவல் தொடர்பு நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியம். இதற்கு, கல்வியாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு, தொழில்நுட்பங்கள், பயிற்சி, நிதித் தேவைகள் போன்றவற்றில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.கல்லுாரி, பல்கலைக் கழகங்களில், ஏப்ரல், மே மாதங்களில் தேர்வுகள் தொடங்கி, ஜூன், ஜூலை மாதங்களில், புதிய மாணவர் சேர்க்கை என்ற தொடர் நிகழ்வுகள் தடைபட்டிருக்கிறது;

தடை நீங்கும்.அப்போது பார்த்துக் கொள்ளலாம் என, கல்வியுலகம் இருக்கக்கூடாது. இந்த புதிய, நவீன உலகில் பல்துறைக்கும் ஏற்ற, அனைத்து விதமான நுால்களும் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன.கற்றல் - கற்பித்தல் தொடர்பான, பல இணையதளங்கள் தற்போது இலவசமாகப் பயன்படுத்தும் விதத்தில் மாறியுள்ளன. உதாரணமாக, 'ஆன்லைன் நுாலகங்கள், ஆன்லைன் வகுப்புகள், திறன் வளர்க்கும் இணையதளங்கள்' என, பலவற்றையும் இலவசமாக பயன்படுத்த முடியும். 

இணையத்தின் வழி ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக பாடத்திட்டங்களை, பலதரப்பட்ட கற்பித்தல் முறைகளைக் கொண்டு, இணையம் வழியாகவும் கணினி, அலைபேசி வழியாகவும், காணொலி காட்சிகளாகவும், 'பவர் பாய்ண்ட், யு டியூப்' முறையிலும் உருவாக்குதல் வேண்டும்.வரும் காலங்களில், பாடத்திட்டங்கள் இணையம் வழியாகவே வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நுால்களை உருவாக்கும் முறைகளுடன் கூடவே, புதிய தொழில்நுட்பம் மூலம், எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

பல அறிவியல் நுால்கள் இணையத்தில், நுால் வடிவிலேயே வந்துள்ளன. இவற்றைப் போல, பிற துறை சார்ந்த நுால்களையும் அறிமுகப்படுத்த ஆசிரியர்கள் முற்படவேண்டும். இந்தச் சூழலில், மாணவர்களும், அவர்களை வழி நடத்தும் ஆசிரியர்களும், தொடர்ந்து இயங்க வேண்டும்.இதற்கான வழிகளை, இணையத்தின் வழி பின்பற்றுதல் மிகவும் பயனுள்ளது. இதைத் திறம்பட, மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பயிற்றுவிக்க வேண்டும்.வீடுகளில் முடங்கியுள்ள, இன்றைய மாணவர்களும் மற்றும் அவர் தம் பெற்றோரும் செய்வதறியாது உள்ளனர். 

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும், அவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வியின் தன்மை எவ்வண்ணம் அமைப்பது என, பெற்றோர் கவலை கொள்ளும் நிலையில் உள்ளனர்.இதற்கான வழியாக, இணையதளத்தில் படிக்கும் பழக்கத்தை பெற்றோர் மூலமாக, ஆசிரியர்கள் ஒன்றிணைந்த, கல்விக் குழு முயற்சி செய்ய வேண்டும். தேர்வை எதிர் கொண்டிருக்கும் மாணவர்கள், அடுத்த கட்ட நிலையில், கல்விக் கற்றலை, இணையங்கள் வழி நெறிபடுத்த வேண்டிய கட்டாயத்தில், ஆசிரியர்களும், பெற்றோரும் உள்ளனர். 

கொரோனா சிக்கல்கணினி மற்றும் இணையதளங்களின் பயன்பாட்டைக் கணிப்பதில் உள்ள ஒரு பிரச்சனை, கற்போரை மையமாக வைக்கும் கல்விச் சூழலைப் பரிசோதிக்க, தற்போது நடைமுறையில் இருக்கும் அளவீடுகளால் முடியாது. அத்துடன், கற்கும் முறையோடு, தொழில்நுட்ப பயன்பாடும், ஒருங்கிணைந்து வருவதால், எந்த நுட்பம் சரியானது என்பதை, கண்டுபிடிப்பதும் கடினம்.கற்றலில் ஏற்படும் மாற்றத்திற்கு, இந்த தொழில் நுட்பங்கள் தான் காரணம் என்பதையும் முடிவு செய்ய இயலாது. இந்தக் கொரோனா சிக்கல் சூழலில், மத்திய - மாநில அரசுகள், கற்றல் - கற்பித்தலில் இணையவழி கற்றலை எவ்வாறு சிறப்புடன் செய்ய முடியும் என்பதை, ஆசிரியர்- வல்லுனர் குழு மூலமாக, ஆய்வு செய்ய வேண்டும். 

தொடர் விடுமுறைகள்மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இதுவரை கிடைக்காத அருமையான வாய்ப்பு, இந்த தொடர் விடுமுறைகள்.இனி வரும் காலகட்டம் என்பது, மிகவும் போட்டி நிறைந்ததாக அமையும். வேலையோ, புதிய தொழில்கள் தொடங்குவது என்பதோ, மிகவும் போட்டி நிறைந்ததாகவே இருக்கும்.இதை உணர்ந்து, பெற்றோர் உதவியுடன் மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகளும், தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும் மாணவர், ஆசிரியர், பெற்றோர் ஒருங்கே இணைந்து, இணையவழித் தொடர்பில் செயல்பட வேண்டும்.மாணவர்கள் பாடங்களை மீளாய்வு செய்ய, ஏற்ற காலமாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தித் தான் படிக்க வேண்டும் என்ற சூழல் தற்போது இல்லை. மாணவர்கள் பலரும், 'வாட்ஸ் ஆப்' குழுக்களைக் கொண்டிருப்பர். அதன் மூலமாக, மாணவர்கள் எப்படிப் பயன்பெறுவது என, ஆசிரியர்கள், பெற்றோர் அவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.எனவே, இந்த விடுமுறை நாட்களை மாணவர்கள், தக்க முறையில் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து வாசிப்பு ஆய்வுகளை செய்யும் ஆசிரியர்களே, மாணவர்களின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் வல்லவர்களாகத் திகழ்வர். 

அந்த வகையில், ஆசிரியர்களின் திறன் மேம்படும் வகையில், செயல்பாடுகளை ஊக்குவித்து கல்வி நிர்வாகம் செயல்பட வேண்டும்.மாணவர்கள் தாங்களாகவே ஆராய்ந்து, அறிந்து கற்க வேண்டிய சூழலில் உள்ளனர். கண்ணால் பார்த்தல், காதால் கேட்டல், செய்து பார்த்து, அறிந்து கொள்வது, மாணவர்கள் மனதில், பசுமரத்தாணி போல் பதியும் என்றாலும், மாணவர்கள் தானாகவே அறிந்து கொள்ளும் வகையில், கற்றல் மென்பொருட்களைக் கொண்டு, 'தானே கற்றல்' எனும் இணைய வகுப்பறைகள், அதிக அளவில் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். 

தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்திப் பயிலும் முறையானது, மாணவர்கள், ஆசிரியர்கள், வல்லுனர்களிடையே, அவர்களின் இடமறிந்து கலந்துரையாட, ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம், கற்போரிடையே ஒருமித்த கருத்தையும், தகவல் பரிமாறிக் கொள்ளும் திறனையும், அதிகமாக்க முடியும்.நிதி உதவிமேலும், ஆசிரியர்களுக்கு, கற்றல் - கற்பித்தல் என்பது ஒரு கால கட்டத்திற்கு மட்டும் என்றில்லாமல், வாழும் காலம் முழுக்க தொடர் பணியாகும். எனவே, புதிய தொழில்நுட்பங்களை முழுமையாக ஆசிரியர்கள் தொடர் பயிற்சியாக கொள்ள வேண்டும்.தகவல் தொடர்பு தொழில் நுட்பம், குறிப்பாக, கணினி மற்றும் இணையதளம் முறையாகப் பயன்படுத்தப்பட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் பயன்பெரும் வாய்ப்பை பெறலாம். 

கல்லுாரி, பல்கலைக்கழகங்கள் கட்டமைப்பை பெருக்கிக் கொள்ளுதல் அவசியம். அரசு மற்றும் தனியார் கல்லுாரி பல்கலைக் கழகங்களுக்குத் தேவையான நிதி உதவிகளை அளிக்க, மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும். இந்த ஊரடங்கு மூலமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல தரப்பட்ட கல்வி அமைப்புகளில் பயின்றும், பயிற்றுவித்தும் வருகின்றனர். தரமான மாணவர்களை உலகிற்கு அளிக்கும் நிலையில் இருக்கும் ஆசிரியர்களே, வருங்கால உலகை, செதுக்கும் சிற்பிகளாக விளங்குவர். 

சமூக மேம்பாட்டு வீரர்கள்இந்த ஊரடங்கு இன்னும் எத்தனை நாட்கள் தொடரப் போகிறது என்ற தெளிவின்மை காரணத்தால், கல்விக்கு பெருமளவு நிதியை ஒதுக்கி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டிய சூழலில் அரசுகள் உள்ளன.தமிழகத்தில் தான், அதிக அளவிலான, தரமான அரசு, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன. அவற்றிற்கான நிதி ஆதாரங்கள் தற்போது தடைபட்டிருக்கும் சூழலில், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு கருதி, அதிக அளவிலான நிதியை அளித்து, உதவி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசுகள் உள்ளன. 

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், முக்கிய பங்காற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசுத் துறையினர், துப்புரவு தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். என்றாலும், இந்த சமூகத்தை மேம்பட்ட சமூகமாக உருவாக்குவதிலும், அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்போர் ஆசிரியர்களே.மாணவர்கள் தொய்வின்றி இருக்கும் பொருட்டு, இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து இயங்கும் ஒவ்வொரு ஆசிரியரும், ஒரு சமூக மேம்பாட்டு வீரர்களே. இந்த அடிப்படையில் தான், ஆசிரியர்கள் இயங்குகின்றனர். 
எனவே, அவர்களுக்கான, தகுந்த பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பை வழங்க வேண்டிய தருணமாக அரசுகள் செயல்பட வேண்டும்!இரா.பன்னிருகை வடிவேலன் இணைப்பேராசிரியர்தொடர்புக்கு:இ - மெயில்: pann1973@gmail.com