கொரோனா காரணமாக வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளோம். கடைக்கு அத்தியாவசிய தேவைக்கு பொருட்கள் வாங்கச் சென்றால் கூட என்ன ஏது என்று விசாரிக்காமல் போலீஸ் ஆங்காங்கே அடிக்கும் நிலை உள்ளது. வீட்டிலேயே எளிய இருமல் மருந்து தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்...

இதற்கு தேவையானவை வீட்டு சமையல் அறையிலேயே இருக்கும் மிளகு மற்றும் தேன். வீட்டிலேயே துளசி, கர்ப்பூரவள்ளி இருந்தால் அதையும் சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.

ஒன்பது மிளகு எடுத்து நன்கு இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அது பாதியாக மாறும் வரை கொதிக்க விட வேண்டும். தண்ணீர் குறைவாக உள்ளதால் அடுப்பின் வேகம் / தீயை அதிகமாக வைக்க வேண்டாம். குறைவான தீயிலேயே தண்ணீர் கொதிக்கட்டும். மிளகு நீர் சுண்டியவுடன், அதை ஆறவைத்து, சிறிது தேன் சேர்த்து அருந்தலாம். இருமல் உடனடியாக கேட்கும். தினமும் இதை அருந்தி வந்தால் சளித் தொல்லை இருக்காது.


சளி அதிகமாக இருப்பவர்கள், சுக்கு, திப்பிலி, வால்மிளகு, சித்தரத்தை ஆகியவற்றை சம அளவில் தனித்தனியே இடித்து வைத்துக்கொள்ளுங்கள். காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த நான்கையும் 3-4 சிட்டிகை அளவுக்கு சம அளவில் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு அருந்துங்கள். சளித் தொல்லை உங்களை நெருங்காது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.