சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளை நடத்துவதற்கு, பள்ளி கல்வி துறைக்கு, மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், ஜூன், 15 முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடக்கின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், ஜூலை, 1 முதல் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தேர்வு நடத்தும் துறைகள் சார்பில், உரிய அனுமதி கேட்டு, மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அவற்றை பரிசீலித்த உள்துறை, சில கட்டுப்பாடுகளுடன் தேர்வை நடத்த, அனுமதி அளித்துள்ளது.
அதன் விபரம்:
தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்; சோப்பால் கை கழுவுவது, கிருமி நாசினியால் சுத்தம் செய்வது போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.நோய் தொற்று உள்ள பகுதிகளில், தேர்வு மையம் அமைக்க கூடாது. மாணவர்களுக்கு சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும்.ஒவ்வொரு துறையும் தேர்வை நடத்தும் தேதிகளை, முரண்பாடுகள் இன்றி, நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்வை தள்ளி வைக்க வழக்கு
பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க கோரிய வழக்கின் விசாரணையை,ஜூன், 11க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, வி.இளங்கீரன் என்பவர் தாக்கல் செய்த மனு:கிராமங்கள், குக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்களால், பத்தாம் வகுப்பு தேர்வை, தற்போது எழுத முடியாது. அவர்களுக்கு, இணையதள வசதி கிடையாது.
ஊரடங்கு காலத்தில், அவர்களால் படிப்பில் மனதை செலுத்த முடியவில்லை.போக்குவரத்து முழுமையாக இயக்கப்படவில்லை. அவ்வப்போது ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்களை தேர்வுக்கு அனுப்ப, பெற்றோர் பயப்படுகின்றனர்.அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் பலவற்றை, வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றால், தேர்வு எழுத வகுப்பறைகள் நிறைய வேண்டும்.
படித்தவற்றை மாணவர்கள் மறந்திருப்பர். அதனால், படித்ததை ஞாபகப்படுத்த, சில நாட்கள் அவகாசம் வேண்டும். எனவே, பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க வேண்டும். தேர்வு எழுத, மாணவர்களை தயார்படுத்தி கொள்ள, போதிய அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன் 15 க்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக, சிறப்பு பிளீடர் முனுசாமி தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை, ஜூன் 11க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
0 Comments
Post a Comment