மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தம் தொடர்பான பணிகள், வரும், 16ம் தேதி துவங்க உள்ளன. 

விடைத்தாள் திருத்தம் நடைபெறும் மையங்களில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.ஒரு முதன்மை மதிப்பீட்டாளர், ஒரு துறை அலுவலர் மற்றும் விடை மதிப்பீட்டாளர்கள் ஆறு பேர் என, மொத்தம் எட்டு பேர் மட்டுமே, ஒரு அறையில் இருக்க வேண்டும்.விடைத்தாள் திருத்தம் நடைபெறும் மையங்களில், தேவையான அளவுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி, விடைத்தாள்களை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு நாளும், அரசு வாகனம் வழியாக மட்டுமே, துணை மதிப்பீட்டு மையத்துக்கு, விடைத்தாள்கள் எடுத்து செல்லப்பட வேண்டும்.

திருத்தப்படாத விடைத்தாள்களை, ஒவ்வொரு நாளும் முதன்மை மதிப்பீட்டு மையத்தில் ஒப்படைத்து, மறுநாள் பெற்றுக் கொள்ள வேண்டும். விடைத்தாள் மதிப்பெண்களை, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை, முதன்மை மதிப்பீட்டு மையத்தில் மட்டுமே, மேற்கொள்ள வேண்டும். திருத்தம் நடைபெறும் மையங்களில் பணிபுரிய வருவோருக்கு, கிருமி நாசினி மற்றும் சோப்பு ஆகியன ஏற்பாடு செய்து தர வேண்டும். பணிக்கு வருவோர் முக கவசம் அணிந்து வர வேண்டும். அப்படி இல்லையெனில், முக கவசம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.