சென்னை: தமிழகத்தில் இன்று (மே 04) ஒரே நாளில், இதுவரை இல்லாத எண்ணிக்கையாக மேலும் 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது, ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 3,550 ஆகவும், பலியானோர் 31 ஆகவும் உயர்ந்துள்ளது.தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 377 ஆண்கள், 150 பெண்கள் அடங்கும். தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 30 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,107 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில் தற்போது 36 அரசு ஆய்வகங்கள் மற்றும் 14 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 50 ஆய்வகங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இன்று மட்டும் 12,863 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்றைய பெரும்பாலான பாதிப்புகள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்பில் உள்ளவர்களுக்கே ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.