சென்னை : 'தமிழகத்தில், அரசு அலுவலகங்களில், வரும், 18ம் தேதி முதல், வாரத்தில் ஆறு நாட்கள், 50 சதவீத அரசு ஊழியர்கள், சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில், மூன்றாம் கட்ட ஊரடங்கு, நாளை நிறைவடைகிறது. மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்பதை, அரசு அறிவிக்க உள்ளது.இந்நிலையில், நாளை மறுதினம் முதல், அரசு அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என, தமிழக அரசு சார்பில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:l தமிழக அரசு அலுவலகங்கள், மே, 3ம் தேதியில் இருந்து, 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன. வரும், 18 முதல், வழக்கம் போல செயல்பட துவங்கும். 

சமூக இடைவெளியை கடைபிடிக்க, அரசு அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன், வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும்l அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஊழியர்கள், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுவர். முதல் பிரிவு ஊழியர்கள், திங்கள், செவ்வாய்; இரண்டாம் பிரிவு ஊழியர்கள், புதன், வியாழன் பணியாற்ற வேண்டும். மீண்டும், முதல் பிரிவு ஊழியர்கள், வெள்ளி, சனி பணியாற்ற வேண்டும்l அடுத்த வாரம், திங்கள், செவ்வாய், இரண்டாம் பிரிவு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு, ஊழியர்கள் அடுத்தடுத்து சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். 

இந்த சுழற்சி முறை தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். பணியில்லாத நாட்களில், எப்போது அழைத்தாலும், அலுவலகம் வர, ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டும்l 'குரூப் - ஏ' பிரிவு அலுவலர்கள், வாரத்தின் ஆறு நாட்களும் பணிக்கு வர வேண்டும். அனைத்து பணியாளர்களும், அலுவலக பணிகளை கவனிக்க, மின்னணு தகவல் தொழில்நுட்ப சாதனங்களில், தயார்நிலையில் இருக்க வேண்டும். 

சுழற்சி முறை பணி, அனைத்து அரசு அலுவலகங்கள், பல்கலைகள், கல்வி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், சங்கங்கள் அனைத்திற்கும் பொருந்தும்l அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகளுக்கு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள உத்தரவு பொருந்தும். ஊழியர்களுக்கு தேவையான, போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அதே நேரத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் அரசு ஊழியர்களுக்கு தற்போதைய அரசாணை பொருந்தாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.