குளறுபடிகளுக்கு மத்தியில்  பிளஸ் 2 விடைத்தாள் திருத்த பணிகள், நேற்று துவங்கின

சென்னை : பிளஸ் 2 விடைத்தாள் திருத்த பணிகள், நேற்று துவங்கின. பல இடங்களில், போக்குவரத்து வசதியின்றி, ஆசிரியர்கள் அவதிப்பட்டனர். 

பள்ளிகளில், சமூக இடைவெளி இல்லாதது மட்டுமின்றி, முகக் கவசம், கிருமி நாசினி தட்டுப்பாடும் ஏற்பட்டது.பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று மாநிலம் முழுதும், 203 மையங்களில் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக, சென்னை மாவட்டத்தில், திருத்தப்பட வேண்டிய விடைத்தாள்கள், மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு உள்ளன. மேலும், சென்னை மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி அணியில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், நேற்று தலைமை மதிப்பீட்டாளர்கள் பணியை துவங்கினர். பல இடங்களில், மதிப்பீட்டுக்கு வந்த ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து வசதியை சரிவர செய்யாமல், குளறுபடி செய்தனர். சில இடங்களில், சொந்த செலவில், ஆசிரியர்கள் காரில் வந்தனர்.கிராமப்புறங்களில் இருந்த ஆசிரியர்கள், விவசாயிகளின் டிராக்டர்களை பிடித்து, நகர்ப்புறத்துக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசு பஸ்சில் இடவசதியின்றி, சமூக இடைவெளி விதிகளை காற்றில் பறக்க விட்டு, ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டனர். 

ஒரு இடத்தில், அரசு பஸ்களை பழுதுபார்க்க செல்லும் வாகனத்தில், ஆசிரியர்களை அழைத்து வந்ததால், குளறுபடி ஏற்பட்டது. சில பகுதிகளில், கல்வித் துறையில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட, 'டப்பா' வாகனங்களில் ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டதாக தெரிவித்தனர்.விடை திருத்தும் மையங்களில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. வகுப்பறைகளை, ப்ளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரால் சுத்தம் செய்திருந்ததால், அதன் நெடியை தாங்க முடியாமல், ஆசிரியர்கள் அவதிப்பட்டனர். 

பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு, சில இடங்களில் முகக் கவசம் வழங்கப்பட்டது. பல இடங்களில், கைக்குட்டைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்த பின், விடைத்தாள் திருத்த பணிகளை துவங்க அறிவுறுத்தப்பட்டது. சில பள்ளிகளில், ஒவ்வொருவரும் சோப்பு வாங்கி வருமாறு கேட்டு கொள்ளப்பட்டனர். உதவி மதிப்பீட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ள, முதுநிலை ஆசிரியர்கள், இன்று பணியை துவங்க உள்ளனர். மொத்தம், 43 ஆயிரம் பேர், இன்று பணியில் ஈடுபட உள்ளனர். 

அனைவருக்கும் போக்குவரத்து வசதி முறைப்படி செய்யப்படுமா என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.விடைத்தாள் திருத்த பணிகளை தள்ளிவைக்க, ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், பல குளறுபடிகளுக்கு மத்தியில், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், இப்பணியை துவங்கிஉள்ளனர்.இன்று எத்தனை பேர் பணிக்கு வருகின்றனர் என்பதைப் பொறுத்து, இப்பணி திட்டமிட்டப்படி நடக்குமா அல்லது தாமதமாகுமா என்பது தெரிய வரும்.

dinamalar