சென்னை : தமிழகத்தில் இம்மாதம், வீட்டு காஸ் சிலிண்டர் விலை, அதிரடியாக, 192 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ; ஓட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை, வினியோகம் செய்கின்றன. அந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, காஸ் சிலிண்டர் விலையில், மாதம்தோறும் மாற்றம் செய்கின்றன. கொரோனா வைரஸ் பரவலால், பலரும் வீடுகளில் முடங்கியுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சூழலில், ஏப்ரலில், 761.50 ரூபாய்க்கு விற்பனையான வீட்டு சிலிண்டர் விலை, இம்மாதம் அதிரடியாக, 192 ரூபாய் குறைக்கப்பட்டு, 569.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

இந்த விலைக்கு சிலிண்டர் வாங்கியதும், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில், மத்திய அரசு வழங்கும் மானிய தொகையை, எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும்.வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை, 257.50 ரூபாய் குறைந்து, 1,144.50 ரூபாயாக சரிந்துள்ளது. டில்லியில், வீட்டு சிலிண்டர் விலை, 581.50 ரூபாய்; மஹாராஷ்டிராவில், 569.50 ரூபாய்; மேற்கு வங்கத்தில், 584.50 ரூபாய்.