புதுடில்லி: நாடு முழுவதும் மே 12 முதல் பயணிகள் ரயில் படிப்படியாக இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக டில்லியிலிருந்து 15 சிறப்பு ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நாளை மறுநாள் இயக்கப்பட உள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரயில், பஸ் மற்றும் விமான போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை மறுநாள்(மே 12) முதல் ரயில்களை படிப்படியாக இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மே 12 முதல் பயணிகள் ரயில் சேவையை படிப்படியாக துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டில்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, நாளை மாலை 4 மணி முதல் துவக்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

சென்னை, மும்பை, திருவனந்தபுரம், செகந்திராபாத், பெங்களூரு, திப்ருகர், ஆமதாபாத், ஜமுதாவி, அகர்தலா, ஹவுரா, பாட்னா, ராஞ்சி, புவனேஷ்வர், பிலாஸ்பூர் ஆகிய ஊர்களுக்கு டில்லியிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்று இல்லாமலும், மாஸ்க் அணிந்து வருபவர்கள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.