சென்னை : 'கொரோனா இல்லாத மாநிலமான பிறகே, கல்லுாரிகள் திறப்பு' என்றும், 'பள்ளி மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு தேர்வு நடந்தே தீரும்' என்றும், இரண்டு விதமான முடிவுகளை, தமிழக கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. 

தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 27ல் நடப்பதாக இருந்தது; ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, கொரோனா வேகமாக பரவும் சூழலில், 10ம் வகுப்பு தேர்வை நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று அளித்த பேட்டி:ஜூன், 1ல், திட்டமிட்டபடி, 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதித்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார். 

இந்நிலையில், ''மாணவர்களின் அச்சம் நீங்கிய பிறகே, கல்லுாரிகளை திறக்க முடியும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.அவர் அளித்த பேட்டி:தமிழகம், கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமான பின்னரே, கல்லுாரிகளை துவங்க முடியும். மாணவர்களின் அச்சம் நீங்க வேண்டும். அதன்பின், தேர்வை நடத்தவும், கல்லுாரியை திறக்கவும் முடியும். எனவே, மாணவர் பாதுகாப்பு விஷயத்தில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.