சென்னை : 'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, படிக்கும் பள்ளிகளிலேயே, தேர்வு மையம் அமைக்கப்படும்' என, பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஜூன், 1ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே, தேர்வு மையம் அமைக்கப்படும்.ஒவ்வொரு தேர்வறையிலும், 10 மாணவர்கள் மட்டும், சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்படுவர்.அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மாணவர்களுக்கு, சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும். 

தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளித்து, அறைகளை துாய்மையாக வைக்க வேண்டும். அனைத்து மாணவர்களும், முக கவசம் அணிந்திருக்க வேண்டும். இதற்கு, பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.