புதுடில்லி: மீதமுள்ள, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடுவதை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஒத்தி வைத்துள்ளது.
latest tamil news

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய பள்ளி கல்வி வாரியம் நடத்தும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், கடந்த பிப்ரவரி, 24ம் தேதி துவங்கியது. ஏப்., 14 வரை, தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால், கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, இதில் பிரச்னை ஏற்பட்டது.நாட்டின் மற்ற பகுதிகளில், 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால், வடகிழக்கு டில்லி பகுதியில், கலவரம் மற்றும் ஊரடங்கு காரணமாக, 10ம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக நடத்த முடியாமல் போனது. இதே போல, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, சில பாடங்களுக்கான தேர்வுகள், நாடு முழுதும் நடத்தப்படாமல் உள்ளன. ஊரடங்கு முடிந்த பின், தேர்வு நடத்தப்படும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. இதற்கிடையே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில், மாணவர்கள் அதற்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை வைத்து, தேர்ச்சி விபரத்தை பள்ளிகளே அறிவிக்கலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்தது. 'ஜூலை 1 முதல், 15 வரை, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான எஞ்சியுள்ள தேர்வுகள் நடத்தப்படும்; இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதன்படி தேர்வு அட்டவணை, நேற்று மாலை வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது.


latest tamil news

இந்நிலையில், தேர்வு அட்டவணை வெளியிடுவதை, சி.பி.எஸ்.இ., ஒத்திவைத்துள்ளது. இதுபற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:எஞ்சியுள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை அறிவிப்பதில், சில தொழில்நுட்பம் தொடர்பான விவகாரங்களையும், சி.பி.எஸ்.இ., கருத்தில் கொண்டுள்ளது. அதனால், தேர்வு அட்டவணை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும், 18ம் தேதி, தேர்வு அட்டவணை வெளியாகும். இவ்வாறு, அவர் கூறிஉள்ளார்.