சென்னை: ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஜூன், 1ல் துவங்குகிறது. அம்மாதம், 12ம் தேதி வரை, தேர்வுகளை நடத்த, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 


latest tamil news


கொரோனா பிரச்னையால், மார்ச், 27ல் நடத்தப்படவிருந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, காலவரை யறையின்றி தள்ளி வைக்கப்பட்டது. அதேபோல, மார்ச், 26ல் நடக்கவிருந்த, பிளஸ் 1 பாடங்களுக்கான தேர்வுகளில் சில, தள்ளி வைக்கப்பட்டன. தமிழகத்தில், மார்ச், 24ல் ஊரடங்கு அமலானதால், அன்று முற்பகலில் நடந்த, பிளஸ் 2 வேதியியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வுகளில், 37 ஆயிரம் மாணவர்கள் வரை பங்கேற்க முடியவில்லை.


latest tamil news

இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்படுமா, ரத்து செய்யப்படுமா என, பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால், '10ம் வகுப்பு பொதுத் தேர்வு உட்பட, தள்ளி வைத்த பாடத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்து
இருந்தார்.அதன்படி, இத்தேர்வுகளை, ஜூனில் நடத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான, புதிய கால அட்டவணையை, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார்.
ஜூன், 1ல் 10ம் வகுப்பு தேர்வு துவங்குகிறது; 12ல் முடிகிறது. தினமும் காலையில், மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும். மார்ச், 26ல், நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்ட, பிளஸ் 1 தேர்வு, ஜூன், 2ல் நடத்தப்படும். மார்ச், 24ல் நடந்த, பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காத, 37 ஆயிரம் மாணவர்களுக்கு, ஜூன், 4ல் தேர்வு நடத்தப்பட உள்ளது.தேர்வு முடிவுகள்


அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேவையான, சுகாதார வசதிகள், பள்ளிகளில் ஏற்படுத்தப்படும். தேர்வறையிலும், தேர்வு மையத்திலும், மாணவர்கள் இடையே, தனி மனித விலகலை கடைப்பிடிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.சென்னையில், கொரோனா வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கைகளால், தேர்வை நடத்துவதில் சிரமம் ஏற்படுமானால், அது குறித்து, அடுத்த வாரம் உரிய முடிவு எடுக்கப்படும்.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், வரும், 27ம் தேதி துவங்கும். பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வு முடிவு, ஜூன், 19க்குள் வெளியிடப்படும். 

பிளஸ் 1 தேர்வு முடிவு, ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், ஜூன், 15ல் துவங்கும்; தேர்வு முடிவுகளை, ஜூலை, 4க்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும். 10 கி.மீ.,க்கு மேல், எந்த தேர்வு மையங்களும் இருக்காது.பெற்றோர் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, அனைத்து தேர்வர்களுக்கும், பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும். தேர்வர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், பஸ்சில் தேர்வுக்கு அழைத்து வரப்படுவர். தேர்வு முடிந்ததும், அதே பஸ்சில், இருப்பிடத்துக்கு கொண்டு சென்று விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, அந்தந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம், தேர்வர்களின் இருப்பிட விபரங்கள் கேட்டு பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு முடிந்த பின், தேர்வர்கள் அமர்ந்திருந்த இருக்கைகள், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.இவ்வாறு, அவர்

கூறினார்.

பள்ளிகள் திறப்பு எப்போது?


அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி குறித்து, இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டியது முக்கியம் என்பதால், அதை விரைந்து நடத்துமாறு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதும், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, 10 தனியார் கல்லுாரிகளில் தங்குமிடம், உணவு வசதிகளுடன், சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். 
மேலும், நீட் பயிற்சி அளிப்பது தொடர்பான வழிகாட்டும் வகுப்புகள், அரசு பள்ளி ஆசிரியர்கள், 3,000 பேருக்கு நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.தேர்வு சந்தேகங்கள் போக்க ஆலோசனை


பத்தாம் வகுப்பு தேர்வு குறித்த, மாணவர்களின் சந்தேகங்களை போக்க, மாவட்ட வாரியாக ஆலோசனை வழங்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக, மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். அவர்கள் தைரியமாக தேர்வு எழுத, நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும், தலா, ஐந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.