சென்னை : 'சி.பி.எஸ்.இ., தேர்வு குறித்து வதந்தி பரப்பினால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்பட்ட, பிளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுகளில், சில தேர்வுகள் மட்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கை காரணமாக, தேர்வில் சில பாடங்களை நீக்கி, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என, அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில், சி.பி.எஸ்.இ., தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு முடிவுகள் எந்த தேதியில் வெளியாகும் என்றும், பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. அதனால், மாணவர்கள்மற்றும் பெற்றோர் குழப்பம் அடைந்து உள்ளனர். 

இது குறித்து, சி.பி.எஸ்.இ., வாரிய செயலர்,அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிவிப்பில், 'சி.பி.எஸ்.இ., தேர்வு தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது, போலீசில் புகார் செய்யப்பட்டு, கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 'எனவே, மாணவர்கள் வதந்தியை நம்பாமல், சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ தளங்களில், தகவல்களை தெரிந்து கொள்ளவும்' என, கூறப்பட்டுள்ளது.