காப்பியடித்து ஆராய்ச்சி யு.ஜி.சி., அதிரடி உத்தரவு

சென்னை:'காப்பி அடிக்கப்பட்ட, போலி ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்க கூடாது' என, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

ஆராய்ச்சி மாணவர்கள்,தங்களின் ஆராய்ச்சி கருத்துகளை சொந்தமாக வெளியிட வேண்டும். ஏற்கனவே, யாரோ வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கைகளை காப்பிஅடித்து, ஆராய்ச்சி செய்யக் கூடாது என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக, பிஎச்.டி., படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் பலர், முந்தைய ஆராய்ச்சி கட்டுரைகள் அல்லது தாங்கள் ஏற்கனவே வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை, முன், பின்னாக காப்பியடித்து, புதிதுபோல் மாற்றி சமர்ப்பிப்பதாக, புகார் எழுந்து உள்ளது.

இது குறித்து, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், கல்லுாரிகள், பல்கலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், 'காப்பியடிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிப்பவர்களுக்கு, வேலைவாய்ப்போ, பதவி உயர்வோ வழங்கக்கூடாது. 'இந்த விஷயத்தில், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.