பள்ளி, கல்லுாரிகள் கட்டாய வசூலா?: பேரிடர் சட்டம் பாயும்
சென்னை :'பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி, கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லுாரிகள் மீது, பேரிடர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கல்வி நிறுவனங்களுக்கு, ஒரு மாதத்துக்கு மேலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


பெற்றோருக்கு அதிர்ச்சிஇந்நிலையில், பல பள்ளிகளும், கல்லுாரிகளும், வரும் கல்வியாண்டுக்கான மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்தும்படி, பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றன. ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தொழில்கள் நலிந்து, பலர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கு, தற்போதே கல்வி கட்டணம் கேட்டு, பள்ளி, கல்லுாரிகள் கட்டாயப்படுத்துவது, பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, நமது நாளிதழில் இரண்டு முறை செய்தி வெளியானது. இதையடுத்து, கட்டணம் கேட்டு வற்புறுத்த வேண்டாம் என, பள்ளி கல்வி அதிகாரிக, 'வாட்ஸ் ஆப்' வழியே அறிவுறுத்தினர்.இந்நிலையில், 'கல்வி கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் பற்றி, பெற்றோர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் நேற்று முன்தினம் அறிவித்தார்.


அரசாணை:


இதை தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில், தலைமை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ள அரசாணை: சில பள்ளி, கல்லுாரிகள், இந்த ஊரடங்கு காலத்தில், மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு, பெற்றோரை கட்டாயப்படுத்துவதாக, அரசின் கவனத்துக்கு தகவல்கள் வந்துள்ளன. 

எனவே, அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும், கல்வி கட்டணம் தொடர்பாக அறிவுறுத்தல்களை அரசு வழங்குகிறது.பள்ளி மற்றும் கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டுக்கோ அல்லது ஏற்கனவே முடிந்த கல்வி ஆண்டுக்கோ, கல்வி கட்டணம், தாமத கட்டணம், அபராதம் போன்றவை கேட்டு, பெற்றோரை வற்புறுத்தக்கூடாது.அவ்வாறு கேட்டால், புகாருக்கு ஆளாகும் நிறுவனங்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.