சென்னை : அரசு பள்ளி மாணவியரின் வீடுகளுக்கே சென்று, 'நாப்கின்' வழங்கும் பணியை, சத்துணவு ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

இதுகுறித்து, தமிழக சத்துணவு ஊழியர் சங்கத்தின் தலைவர், பா.சுந்தராம்பாள் கூறியதாவது: தமிழகத்தில், 43 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. கணக்கெடுப்புஇவற்றில், 1 லட்சம் பேர், சத்துணவு ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்.தற்போது, கொரோனா தடுப்பு பணியில், எங்களையும் ஈடுபடும்படி, அரசு கூறியுள்ளது. அதன்படி, சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து, வீடு வீடாகச் சென்று, கொரோனா நோயாளிகள் பற்றிய கணக்கெடுப்பு பணியில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். 

மற்ற இடங்களில், வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு சமைப்பது, அத்தியாவசிய பணியாளர்களுக்கு உணவு சமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். தற்போது, கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளில், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவியருக்கு, இலவச நாப்கின்களையும், அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குகிறோம். இக்கட்டான சூழலில், அரசு வழங்கும் எவ்வித பணிகளையும் செய்ய, நாங்கள் தயாராக உள்ளோம். 

முக கவசம் :- அதேநேரம், சுகாதாரப் பணியாளர்கள், போலீசாருக்கு வழங்குவது போல, இரட்டிப்பு ஊதியம், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். மேலும், ஆய்வு பணிகளுக்குச் செல்லும்போது, பாதுகாப்பு உடை, கையுறை, முக கவசம் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.