மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் 'ஆரோக்கிய சேது' செயலியை தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று குறித்த தகவல்களை அறியவும், அருகில் உள்ள அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை? என்பதை அடையாளம் காணவும் ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்களும் (ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்பட) 'ஆரோக்கிய சேது' செயலியை தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் அலுவலகத்துக்குச் செல்லும்முன் செயலியில் 'safe' (பாதுகாப்பு) அல்லது 'low risk' (குறைந்த ஆபத்து) என்பதை காட்டுவதை உறுதி செய்தபின்னரே அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை, 'moderate' (மிதமான பாதிப்பு) அல்லது 'high risk' (அதிக ஆபத்து) எனக் காட்டினால் 14 நாள்கள் தன்னைத்தானே ஊழியர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.