What is a Split Air Conditioner System? | Networx
புதுடில்லி:'கொரோனா' வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், வீடுகளில், 'ஏசி' எனப்படும் குளிர் சாதனத்தை உபயோகிப்பது குறித்த வழிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும், 'ஏசி'யை, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, மத்திய பொதுப்பணித்துறை அமைச்சகம் நேற்று அறிக்கையாக வெளியிட்டது. அதில், கூறப்பட்டு உள்ளதாவது:

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலில், நாட்டின் பருவ நிலையை, சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இக்குழுவினர், 'ஏசி'யை பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு நடத்தி, சில வழிமுறைகளை வகுத்துள்ளனர். அதன்படி, 'ஏசி' வெப்பத்தை, 24 - 30 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் வைத்து பயன்படுத்த வேண்டும். 'ஏசி'யில் இருந்து வெளியாகும் குளிர்ந்த காற்றுடன், வெளிக் காற்றும் சேரும் வகையில், ஜன்னல்களை சிறிது திறந்து வைக்க வேண்டும். 

குளிர்ந்த காற்று உள்ளேயே சூழ்ந்து இருக்கக்கூடாது. வீடுகளில், 'ஏசி' உபயோகத்தில் இல்லாத போதும், மின் விசிறிகள் பயன்படுத்தும்போதும், ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். 'எக்சாஸ்ட் பேன்' இருந்தால், அதையும், 'ஆன்' செய்து வைக்கலாம். அப்போது தான் காற்றோட்டம் சீரான முறையில் இருக்கும். 

இந்த ஊரடங்கு காலத்தில், பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆகையால், இங்குள்ள, 'ஏசி'க்கள் பராமரிப்பின்றி இருக்கும். அதன் குழாய்களில் பூஞ்சைகள் உருவாகி இருக்கும் என்பதால், பராமரிக்காமல் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.