மூன்றில் ஒரு பங்குக்கு மேல்அரசு ஊழியர்கள் பணிக்கு வர கூடாது!

நாடு முழுதும், 48.34 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள் உள்ளனர். இவர்களில், துணை செயலர்களுக்கு மேல் பதவிகளில் உள்ள அதிகாரிகள் அனைவரும், ஏப்ரல், 15க்கு பின், தவறாமல் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், மீதமுள்ள ஊழியர்களில், 33 சதவீத பேர், தேவைக்கு ஏற்றார் போல், அலுவலகம் வரவேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களிலும், துணை செயலர் பதவிக்கு கீழ் உள்ள ஊழியர்களில், மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு வரவழைக்கப் படுவதால், அலுவலகங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக, தனி மனித இடைவெளி என்பது கேள்விக்குள்ளாகும் நிலை உருவானது.

இதை கருத்தில் கொண்டு, 'அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும், துணை செயலர் பதவிக்கு கீழ் உள்ள ஊழியர்கள், மூன்றில் ஒரு பங்குக்கு மேல், பணிக்கு அழைக்கப்பட கூடாது' என, மத்திய அரசு பணியாளர் நலத்துறை அமைச்சகம், நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.வீட்டில் இருந்தபடி பணியாற்றும் ஊழியர்கள், தொலைபேசி மற்றும் 'இணையம்' வாயிலாக, எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும் என்றும், தேவைப்படும் பட்சத்தில், அவர்கள் அலுவலகம் வருமாறு அழைக்கப்படுவர் என்றும், அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.