சென்னை : , ஏப். 3- 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஐ.சி.எஸ்.இ., தேர்வு ரத்து செய்யப்படவில்லை. இதுதொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்' என, ஐ.சி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பிளஸ் 2 மாணவர்களுக்கு, தமிழக பாட திட்டத்தில், அனைத்து தேர்வுகளும் முடிந்து விட்டன. மார்ச், 24ல் நடந்த தேர்வில் மட்டும், 34 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு, வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளில், சில பாடங்களுக்கு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு முடிந்ததும், விடுபட்டவற்றில் முக்கிய பாடங்களுக்கு மட்டும், தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஐ.சி.எஸ்.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சிலால் தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள், ரத்து செய்யப்பட்டுள்ளதாக, 'வாட்ஸ் ஆப்'பில் தகவல்கள் பரவின. இது குறித்து, ஐ.சி.எஸ்.இ., தலைமை நிர்வாக அதிகாரி, ஜெர்ரி அரத்துாண் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஐ.சி.எஸ்.இ., பாட திட்டத்தில், தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. தேர்வுக்கான புதிய கால அட்டவணை, இன்னும் தயாரிக்கப்படவில்லை. ஊரடங்கு முடிந்த பின், இதற்கான முடிவு எடுக்கப்படும். எனவே, ஐ.சி.எஸ்.இ., தேர்வு குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் வெளியான தகவல்கள் அனைத்தும் போலியானவை. அவற்றை மாணவர்கள் பொருட்படுத்த வேண்டாம். வதந்தி பரப்பியவர்கள் குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.