பாரம்பரிய மருத்துவத்தில்'கொரோனா'சிகிச்சைக்கான மருந்து புதுடில்லி, : ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை சார்ந்த வல்லுனர்கள், 'கொரோனா' சிகிச்சைக்கான மருந்து தயாரிக்கும் பணியில் முறைப்படி ஈடுபட, ஆயுஷ் அமைச்சகம், முறையான அனுமதி அளித்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்காக, சர்வதேச அளவில், முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ துறைகளிலும், கொரோனாவுக்கான மருந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.ஆனால், இதற்கான முறையான அரசு அங்கீகாரம் மற்றும் அனுமதி, வழங்கப்படாமல் இருந்தது. 

இந்நிலையில், அதற்கான அனுமதியை, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், நேற்று அளித்துள்ளது. அதன் விபரம்:இந்த ஆராய்ச்சிக்கு, அறிவியல் ஆலோசனை அமைப்பிடம் இருந்து, முறையான அனுமதி பெற வேண்டும்; முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கான மருத்துவ பரிசோதனைகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். 

ஆயுஷ் அமைச்சகத்தின் பதிவு பெற்ற மருத்துவர், ஆராய்ச்சி பணியில் அங்கம் வகிக்க வேண்டும். ஆராய்ச்சி பணிகளின் முன்னேற்றம் மற்றும் கால அளவுகள் குறித்த தகவல்கள், அவ்வப்போது, ஆயுஷ் அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். இது போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.