தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கும்: தளர்வு கிடையாது என அரசு அறிவிப்பு

சென்னை:'தமிழகத்தில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும், மே, 3 வரை தொடரும்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச், 24 முதல், ஏப்., 15 காலை வரை, நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனினும், நோய் பரவல் கட்டுப்படாததால், மே, 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.ஆனாலும், நேற்று முதல், சில தொழில்கள் செயல்பட அனுமதி அளித்து, மத்திய அரசு, சில தளர்வுகளை அறிவித்தது.

இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது குறித்து, மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என, தெரிவித்திருந்தது.அதை முடிவு செய்வதற்காக, தமிழக நிதித்துறை செயலர், கிருஷ்ணன் தலைமையில், வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, ஊரடங்கில் பல தளர்வுகளை பரிந்துரைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், நேற்று முன்தினம், நோய் தொற்று அதிகரித்ததால், இது சமூக பரவலுக்கான அறிகுறியோ என்ற சந்தேகம், மக்களிடம் ஏற்பட்டது. எனவே, ஊரடங்கு தளர்வுக்கான வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில், வல்லுனர் குழு, நேற்று தன் அறிக்கையை, முதல்வரிடம் சமர்பித்தது. அதைத் தொடர்ந்து,நேற்று பகல், 12:30 மணிக்கு, முதல்வர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், வேலுமணி, ஜெயகுமார், அன்பழகன், விஜயபாஸ்கர், உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் அனைத்து துறை செயலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, பல்வேறு துறைகள் சார்பில் எடுக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், குழு அளித்த அறிக்கையை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.பின், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:உயர்மட்ட குழு அளித்த ஆலோசனைகள், கவனமாக ஆராயப்பட்டன. அதன் அடிப்படையில், நோய் தொற்று மேலும் பரவுவதை தடுக்க, கடும் நடவடிக்கைகளை, தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.

எனவே, தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தையும், மத்திய அரசு அறிவித்துள்ள, மே, 3 வரை, தொடர்ந்து கடைபிடிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு, ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய் தொற்றின் தன்மையை, மீண்டும் ஆராய்ந்து, நோய் தொற்று குறைந்தால், வல்லுனர் குழு ஆலோசனை பெற்று, நிலைமைக்கு ஏற்றார்போல், தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.