சென்னை : வெயில் அதிகரித்தால், 'கொரோனா வைரஸ்' தாக்கம் குறையும் என்பன போன்ற வதந்திகளுக்கு, உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

உலக சுகாதார நிறுவனமான, டபிள்யூ.எச்.ஓ., நிறுவனம், 'டுவிட்டர்' பக்கத்தில், கொரோனா வைரஸ் குறித்து பரவும் வதந்திகளுக்கு, உரிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.அதன் விபரம்: மெத்தனால், எத்தனால் போன்ற ரசாயனம் குடித்தால், கொரோனா நோய் குணமாகும்?மெத்தனால், எத்தனால் போன்றவற்றை, மருந்து போல் உட்கொள்வதால், கொரோனா நோயிலிருந்து விடுபடலாம் என்பது, மூட நம்பிக்கை. மெத்தனால், எத்தனால் குடிப்பதால், உயிருக்கு ஆபத்து நேரலாம். 

மெத்தனால், எத்தனால், உடலில் உள்ள வைரஸை கொல்லாது. மாறாக, உடல் உறுப்புகளை சிதைக்கும். எனவே, இந்த வதந்தியை நம்பி, உயிரை இழக்காதீர். உங்கள் கைகளை சுத்தமாக வையுங்கள். கண்கள், மூக்கு, வாயை, அடிக்கடி தொட வேண்டாம்.வெயிலில் நின்றால் அல்லது 25 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பநிலை உயர்ந்தால், கொரோனா பரவாது?வெயிலானாலும், மழையானாலும், கொரோனா வைரஸ் பரவும் காரணிகள் இருந்தால் பரவும். 

வெப்பநிலை அதிகம் உள்ள நாடுகளிலும், கொரோனா வைரஸ் பரவியுள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தடுப்புக்கு, வெயிலை ஒரு காரணமாக்க வேண்டாம். மருத்துவ துறை கூறும், உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.தொடர்ந்து, 10 வினாடிகள், உங்கள் மூச்சை இழுத்து பிடிக்க முடிந்தால், கொரோனா வைரஸ் தொற்று அல்லது வேறு நுரையீரல் பிரச்னை இல்லை என்று அர்த்தம்?வறட்டு இருமல், உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவை, கொரோனா வைரஸ் தொற்றுக்கான பொதுவான காரணிகள். சிலருக்கு இன்னும் அதிகமான பிரச்னைகளும் ஏற்படலாம். 

கொரோனா வைரஸ் தொற்றை அறிய வேண்டுமென்றால், அதற்கு மருத்துவ பரிசோதனை அவசியம். வெறும் மூச்சு செயல்பாட்டின் வாயிலாக, கண்டறிய முடியாது. எனவே, மூச்சை இழுத்து பிடிக்கும் விபரீதம் வேண்டாம்.ஈக்கள் வழியாக, கொரோனா வைரஸ், மனிதனுக்கு பரவுகிறது?கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின், எச்சில் துளிகளில் இருந்து பரவுகிறது. இருமல், தும்மல் மற்றும் பேசுதல் போன்றவற்றின் போது, கொரோனா வைரஸ் அருகில் நிற்பவர்களுக்கு பரவுகிறது. எனவே, ஒவ்வொருவரும் தனி மனித இடைவெளியை பின்பற்றி, குறைந்த பட்சம், 1 மீட்டர் தள்ளி நிற்க வேண்டும்.இவ்வாறு, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.