சென்னை:அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான, அகவிலைப்படி உயர்வு, 2021 ஜூலை, 1 வரையும், ஈட்டிய விடுப்புக்கான சம்பளம், ஓராண்டு வரையும், நிறுத்தி வைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசை பின்பற்றி, நிதி நெருக்கடியை சமாளிக்க, தமிழக அரசும், அகவிலைப்படி உயர்வை ரத்து செய்துள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, 2020 ஜூலை, 1 முதல், 2021 ஜூலை, 1 வரை, அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது.அதேபோல், 2020 ஜனவரி, 1 முதல், 2021 ஜூன், 30 வரை வழங்க வேண்டிய, அகவிலைப்படி நிலுவைத் தொகையும் வழங்கப்படாது.

இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நுாலகர்கள், கல்வி நிறுவன பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள் என, அனைவருக்கும் பொருந்தும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்புக்கு சம்பளம் பெறுவதும், ஓராண்டுக்கு ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களுக்கான விடுப்பை எடுக்காமல் இருந்தால், 15 நாட்களை எழுதிக் கொடுத்து, சம்பளம் பெற்றுக் கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஓராண்டுக்கு வாங்காவிட்டால், இரண்டு ஆண்டு களுக்கு சேர்த்து, 30 நாட்களை எழுதிக் கொடுத்தும், அதற்குரிய சம்பளத்தை பெறலாம்.

தற்போது, கொரோனா தடுப்புக்கு, பெரும் தொகை செலவிடப்படுவதால், நிதிச்சுமை ஏற்பட்டு உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஈட்டிய விடுப்புக்கு சம்பளம் வழங்குவது, முதல் கட்டமாக, ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக, தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.

ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், அதுவும் நிறுத்தி வைக்கப்படும். ஈட்டிய விடுப்புக்கு, ஊதியம் வழங்க, அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், அந்த அனுமதியும் ரத்து செய்யப்படும். இந்த உத்தரவு, அனைத்து மாநில அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள், சங்கங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என, அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.