சென்னை : தமிழகத்தில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, இம்மாதம், 64.50 ரூபாய் குறைந்து, 761.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ; வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, மாதம்தோறும், சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. தமிழகத்தில், மார்ச் மாதம், வீட்டு சிலிண்டர், 826 ரூபாய்க்கு விற்பனையானது. 

இம்மாதம், அதன் விலை, 64.50 ரூபாய் குறைந்து, 761.50 ரூபாயாக சரிவடைந்துள்ளது. இந்த விலைக்கு சிலிண்டர் வாங்கியதும், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில், மத்திய அரசு வழங்கும் மானிய தொகையை, எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும்.தமிழகத்தை போல் பெரிய மாநிலங்களான, மஹாராஷ்டிராவில், இம்மாதம், வீட்டு சிலிண்டர் விலை, 714.50 ரூபாய்; மேற்கு வங்கத்தில், 774.50 ரூபாய்; டில்லியில், 744 ரூபாய் என்றளவில் உள்ளன.தமிழகத்தில், வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை, 99.50 ரூபாய் குறைந்துள்ளது.