டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு 50 ஆயிரம் கவச உடைகள் தயாரிப்பு

திருப்பூர் : டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான, கொரோனா தடுப்பு கவச உடைகளை, திருப்பூர் அருகேயுள்ள ஒரு நிறுவனம் தயாரித்து வருகிறது. 

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அணியும் கவச உடைகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆடை உற்பத்தி கட்டமைப்பு உள்ளதால், மத்திய, மாநில அரசுகளின் முழு கவனமும் திருப்பூர் பக்கம் திரும்பியுள்ளது.மருத்துவமனைகளுக்கு தேவையான முகக்கவசம், முழு கவச உடை தயாரிப்பு, 'ஆர்டர்'கள் திருப்பூர் நோக்கி வரத் துவங்கியுள்ளன.பெருமாநல்லுாரில் உள்ள ஓர் ஆடை ஏற்றுமதி நிறுவனம், டில்லி எய்ம்ஸ், புதுசேரி ஜிப்மர் உட்பட மத்திய அரசுமருத்துவமனைகளுக்கு தேவையான கவச உடை தயாரிப்பு ஆர்டர்களை பெற்றுள்ளது. மொத்தம், 50 ஆயிரம் முழு கவச உடைகள் தயாராகின்றன. 

ஆடை உற்பத்தி நிறுவன உரிமையாளர், ராஜேஷ் கண்ணன் கூறியதாவது:முதல் கட்டமாக, 50 ஆயிரம் உடை தயாரிப்புக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. உடை தயாரிப்புக்கான, 'லேமினேட்டட் ராப் ஷீட்' துணியை வழங்கி விடுகின்றனர்.தலை முதல் பாதம் வரையிலான கவச உடையாக தயாரித்து கொடுக்கிறோம். தினமும், 1,500 முதல், 2,000 உடைகள் தயாரிக்கிறோம். இந்த உடைகளுக்கு, பெங்களூரில், கிருமிநாசினி, 'ட்ரீட்மென்ட்' கொடுக்கப்பட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.