சென்னை:தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை அலுவலகம் செயல்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரித்துறை அலுவலகத்தில் இருந்து, அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ஊரடங்கு விதிமுறைகளில், மத்திய அரசு, இம்மாதம், 20ம் தேதி முதல், சில தளர்வுகளை வழங்கி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பின் படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறையின் கீழ் செயல்படும், அனைத்து அலுவலகங்களும், 20ம் தேதி முதல் திறக்கப்படும் என, 16ம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

ஆனால், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், 'ஊரடங்கு மே, 3 வரை நீட்டிக்கப்படும். மத்திய அரசு வெளியிட்ட, புதிய வழிகாட்டு நெறிமுறைகள், தமிழகத்திற்கு பொருந்தாது. ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள் தொடரும்' என, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து அலுவலகங்களும், 20ம் தேதி முதல் திறக்கப்படும் என, பிறப்பிக்கப்பட்ட ஆணை, மே, 3 அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.அதிகாரிகள், வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக, மொபைல் போன்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.