Corona, MP, MLA, Salary, Less, கொரோனா, தடுப்பு_நடவடிக்கை, அமைச்சரவை_கூட்டம், நிதி, ஊரடங்கு, சிகிச்சை
புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதை அடுத்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், எம்.பி.,க்களுக்கான அடிப்படை சம்பளத்தில், 30 சதவீதம் குறைக்க, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியையும் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்ட பலரிடமும், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டமும், நேற்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்தது. இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: வைரஸ் பரவலுக்கு, இதுவரை, 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளுக்கும், போதிய மருத்துவ வசதிகளை மேற்கொள்வதற்கும் அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. 

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ஆகியோரது சம்பளத்தில், 30 சதவீதத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்கள், தாங்களாக முன்வந்து, சமூகப் பணிக்காக, சம்பளத்தைக் குறைக்க ஆர்வம் தெரிவித்துள்ளனர். சம்பளத்தைக் குறைப்பதற்கான அவசர சட்டத்துக்கு, நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இந்த மாதம், 1ம் தேதியிருந்து, அடுத்தாண்டு ஏப்ரல் வரை, ஒரு ஆண்டுக்கு இந்த சம்பளக் குறைப்பு நடைமுறையில் இருக்கும். எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதன் மூலம், 7,900 கோடி ரூபாய் சேமிக்கப்படும். இந்த நிதி முழுதும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார். 

லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், மொத்தம், 788 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதிக்காக, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மேலும், எம்.பி.,க்களுக்கு, மாதத்துக்கு, 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தவிர, இதர படிகளுக்கான தொகையும் கணிசமாக வழங்கப்படுகிறது. தற்போது, சம்பளத்தில் இருந்து மட்டுமே, 30 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படவுள்ளதாகவும், இதர படிகளில் பிடித்தம் செய்யப்படவில்லை என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர்களுக்கு உத்தரவுகொரோனா வைரஸ் பிரச்னையால், நாட்டில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை சரி செய்வதற்கு, போர்க்கால அடிப்படையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தும்படி, மத்திய அமைச்சர்களுக்கு, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: கொரோனா வைரஸ் பிரச்னையால், மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, ஊரடங்கு காலம் முடிந்த பின், இதை சரி செய்வதற்கு என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என, ஒவ்வொரு அமைச்சகமும் திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டுமென, பிரதமர் உத்தரவிட்டுள்ளார். 

ஒவ்வொரு அமைச்சகமும், 10 முக்கிய பிரச்னைகளை அடையாளம் கண்டு, அவற்றை தீர்ப்பதற்கான ஆலோசனைகளை தயாரிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில், இந்த பணிகளை மேற்கொள்ளும்படியும், பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.