ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட, 19 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை, 500 ரூபாய் என்ற விலைக்கு விற்க, கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க, 2013ல், 'விலை கட்டுப்பாட்டு நிதியம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதற்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கினார்.தமிழகம் உட்பட, நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், பிற மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு, மளிகை பொருட்களின் வரத்து பாதித்துள்ளதால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இதனால், விலை கட்டுப்பாட்டு நிதியத்தின் நிதியிலிருந்து, அத்தியாவசிய மளிகை பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, சில தினங்களுக்கு முன், நம் நாளிதழிலும் செய்தி வெளியானது.இதையடுத்து, ரேஷன் கடைகளில், தலா, அரை கிலோ துவரம் மற்றும் உளுந்தம் பருப்பு, 250 கிராம் புளி, 200 கிராம் எண்ணெய், 100 கிராம் மிளகு என, 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை, 500 ரூபாய்க்கு விற்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. இதன் வெளிச்சந்தை விலை, 597 ரூபாயாக இருக்கும் என, கூட்டுறவு துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

மளிகை பொருட்கள், விலை கட்டுப்பாட்டு நிதியம் மற்றும் வேறு நிதி ஆதாரங்களில் இருந்து, 52 கோடி ரூபாய்க்கு, டி.யு.சி.எஸ்., எனப்படும், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் வாயிலாக வாங்கப்பட உள்ளது.இது குறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மாவட்ட இணை பதிவாளர்களுக்கு, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மளிகை பொருட்கள் பை தயாரானவுடன், தங்கள் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகள் வாயிலாக, மளிகை தொகுப்பு பைகளை விற்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.