மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
திருவண்ணாமலை:'திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, பாடத்திட்டம் தொடர்பாக, 'ஆன் லைன்' தேர்வு நடத்தி பரிசு வழங்கப்பட உள்ளது' என, கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊரடங்கு காலத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை மூலமாக, பள்ளி மாணவர்களுக்கான, சிறப்பு, ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மூன்று அடுக்காக இது நடத்தப்படும். 

முதல் கட்டமாக, 100 மதிப்பெண் அடிப்படையில், பள்ளி பாடங்கள் தொடர்பான கேள்விகள்; இரண்டாம் கட்டமாக, பள்ளி பாடங்கள் மற்றும் பொது அறிவுத் தேர்வு நடத்தப்படும். இரண்டு கட்டங்களிலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, ஊரடங்கு காலம் முடிந்தவுடன், மூன்றாம் கட்டமாக, வினாடி - வினா தேர்வு நடத்தப்படும். இந்த வினாடி - வினா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்படும். முதல் கட்ட ஆன்லைன் தேர்வு வரும், 29ல் நடக்கிறது. இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு தேதி, பின்னர் அறிவிக்கப்படும். 

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆறாம் வகுப்பு முதல், 10-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும். தேர்வுக்கான கேள்விகள், ஒவ்வொரு வகுப்பிற்கும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கேட்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான, ஆன்லைன் தேர்வு எழுத விரும்புபவர்கள், திருவண்ணாமலை மாவட்ட இணையதளமான, https:/tiruvannamalai.nic.in முகவரியில் உள்ள, 'student online test' என்ற இணைப்பை, 'கிளிக்' செய்து, விபரங்கள் தெரிந்து கொள்ளலாம். 

அனைத்து பாடப் பிரிவுகளிலும் மொத்தம், 50 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு இரண்டு மதிப்பெண் வழங்கப்படும்.ஆன்லைன் தேர்வில் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவருக்கும், வெவ்வேறு கேள்விகள் கேட்கப்படும். தேர்வு ஒரு மணி நேரம் நடத்தப்படும். முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ளலாம். 

மேலும் விபரங்களை, 93454 64414 என்ற மொபைல் எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.