அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி ...
சென்னை:''பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறித்த அட்டவணை, மே, 3க்கு பின் வெளியாகும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

பள்ளி கல்வி துறையின் வளர்ச்சி பணிகள் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தலைமையில், கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்குபின், அவர் அளித்த பேட்டி:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான், அடுத்த கட்ட வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். முக்கியமான தேர்வு என்பதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும்.தற்போதைய ஊரடங்கு, மே, 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்.

இதற்கான தேர்வு அட்டவணை, மே, 3க்கு பின் வெளியிடப்படும்.தேர்வு நடத்தும் போது, மாணவர்களுக்கு இடையில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும். பொதுத்தேர்வுகளின் போது, ஒரு மாணவரின் விடைத்தாளை மற்றவர்கள் பார்த்து விடாத வகையில், மாணவர்களிடையே இந்த இடைவெளி பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. அந்த இடைவெளி தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 24ல் நடந்த கடைசி நாள் தேர்வில், 34 ஆயிரத்து, 742 மாணவ, மாணவியர் தேர்வை எழுத முடியவில்லை என, தெரியவந்தது. அந்த மாணவர்களுக்கு, வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என, முதல்வர், இ.பி.எஸ்., ஏற்கனவே அறிவித்துள்ளார். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ளப்படும். 

தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, தற்போதைய நிலையில் கல்வி கட்டணம் கேட்டு, பெற்றோரிடம் கட்டாய வசூல் செய்யக்கூடாது. இதுகுறித்து, பெற்றோர் புகார் அளித்தால், அந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.