புதுடில்லி:ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளை நடத்த, மத்திய அரசு தயாராகி வருகிறது. 

கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 25ல் நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. 'வீடியோ கான்பரன்ஸ்'இதையடுத்து, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு, ஆண்டு இறுதித் தேர்வுகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், மே 3 முதல் கொரோனா பாதிப்பு அறவே இல்லாத பகுதிகளில், ஊரடங்கு தளர்த்தப்படும் என, தெரிகிறது.

நேற்று முன்தினம், மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் தலைமையில், அனைத்து மாநில கல்வி அமைச்சர்களின் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே நடைபெற்ற தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணியை துவக்குமாறு, மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டன.

இந்நிலையில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், எஞ்சிய பாடங்களுக்கு தேர்வு நடத்த, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊரடங்கு உத்தரவால் தடைபட்ட, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளை நடத்த, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள், தயாராகி வருகின்றனர். 

உத்தரவு

குறிப்பாக, மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெறவும், கல்லுாரியில் சேர்வதற்கும் தேவையான, 29 முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு, 10 நாட்களுக்கு முன் தெரிவிக்கப்படும். ஏற்கனவே நடைபெற்ற தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணியை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். 

இதற்கிடையே, டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, ''தற்போதைய சூழலில் தேர்வு நடத்த முடியாது என்பதால், உள்மதிப்பீடு அடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்,'' என, நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.இதை மறுக்கும் வகையில், 'ஊரடங்கு முடிந்த பின், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், நேற்று அறிவித்து உள்ளது.