விருதுநகர் :ஹைட்ராக்சிகுளோரோக்வின் மாத்திரையை கொரோனா தடுப்பு மருந்தாக நினைத்து டாக்டரின் பரிந்துரையின்றி உட்கொண்டால் கண், இருதய துடிப்பின் வேகம் மாறுவது போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, என மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர்.உலக மக்களை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோயை தடுக்க பல்வேறு நாடுகள் மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றன. நேற்று முன்தினம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்சிகுளோரோக்வின் என்ற மருந்தை பயன்படுத்தும்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் தேசிய அளவிலான குழுதான் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த மருந்து மலேரியா காய்ச்சலை குணமாக்க பரிந்துரைக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. இந்நிலையில் பலர் தாமாகவே கொரோனா வராமல் தடுக்க தற்காப்புக்காக ஹைட்ராக்சிகுளோரோக்வின் மாத்திரைகளை உட்கொள்ள துவங்கி உள்ளனர். இதை டாக்டர்கள் பரிந்துரையின்றி தாமாகவே உட்கொண்டால் பல்வேறு பாதிப்புக்குள்ளாக நேரிடும் என மருத்துவத்துறையினர் எச்சரிக்கின்றனர்.விருதுநகர் (பொறுப்பு) சுகாதார இணை இயக்குனர் பிரகலாதன் கூறுகையில், ''ஹைட்ராக்சிகுளோரோக் வினை தடுப்பு மருந்தாக நினைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நோயில்லாமல் இந்த மாத்திரையை வாங்கி உண்டால் கண் தெரியாமல் போவது, இருதய நோயாளிகள் சாப்பிட்டால் துடிப்பின் வேகம் மாறுவது உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனால் மருத்துவரிடம் உடல்நிலை காண்பித்து அவரது பரிந்துரையின் பேரிலே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்க சுகாதாரத்தை பேணுவதும், தேவையற்ற கூடுகைகளையும் தவிர்ப்பதே சிறந்த தீர்வாகும்," என்றார்.