சென்னை : 'தடுப்பு நடவடிக்கையால் மட்டுமே, 'கொரோனா' பரவலை கட்டுப்படுத்த முடியும்' என, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 

இதுகுறித்து, அனைத்து பள்ளிகளுக்கும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், அகாடமிக் இயக்குனர், ஜோசப் இம்மானுவேல் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சீனா மற்றும் 24 நாடுகளில், 'கொரோனா' வைரஸ் பரவியுள்ளது. இந்த நோயின் ஆரம்பம் குறித்து, உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, இந்த வைரஸ் பரவுவதாக தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 'கொரோனா' வைரசுக்கு நேரடி சிகிச்சைக்கான மருந்தோ, தடுப்பு மருந்தோ, இதுவரை கண்டுபிடிக்கவில்லை. 

எனவே, தடுப்பு நடவடிக்கைகளால் மட்டுமே, வைரஸ் பரவாமல் தடுக்க முடியும். இதுகுறித்து, ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினியால், கைகளை கழுவுவது; கைக்குட்டை பயன்படுத்துவது; தும்மல், இருமலின்போது, வாயை கைக்குட்டையால் மூடிக் கொள்வது குறித்து, அறிவுறுத்த வேண்டும். 

இந்த நடவடிக்கைகளை, மாணவர்கள் வழியாக எடுத்து சென்றால், அது குடும்பத்தினரையும், சமூகத்தினரையும் மாற்றும். எனவே, 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில், எந்தவித அலட்சியமும் இல்லாமல், பள்ளிகள் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.