சென்னை,: கொரோனா வைரஸ் பிரச்னையால், ஓய்வூதியதாரர்கள் தங்களின் உயிர்வாழ் சான்றிதழை, நேரில் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியதாரர்கள், ஒவ்வொரு நிதியாண்டு துவங்கும் போதும், தங்களின் உயிர்வாழ் சான்றிதழை, நேரடியாக ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும். 
அதேபோல, இந்த ஆண்டு உயிர்வாழ் சான்றிதழ், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது, ஓய்வூதியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகங்களில், நேரில் ஆஜராக வேண்டும். இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், இந்த வைரசால், முதியவர்களின் உடல்நலனுக்கு, அதிக பாதிப்பு ஏற்படும் என, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, உயிர்வாழ் சான்றிதழ்களை, ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்கலாம் என, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, தமிழக அரசின் நிதித்துறை செயலர், கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.எனவே, ஓய்வூதியம் பெறுவோர், தங்களின் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க, செப்டம்பர் வரை அவகாசம் எடுத்து கொள்ளலாம்.