சென்னை : 'ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத ஆசிரியர்களுக்கு மட்டுமே, தேசிய விருது வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' வகுப்புகள் நடத்துவதை ஊக்கப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருது வழங்கப்படுகிறது. இதன்படி, 2018, 2019ம் ஆண்டில், தகவல் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி, கற்பித்தல் பணி மேற்கொண்ட ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்குவதற்கான பட்டியலை, மாநில அரசுகள் அனுப்பும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, மாவட்டந்தோறும், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய, சிறந்த ஆசிரியர்களின் பட்டியலை அனுப்புமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார். இந்த பட்டியலில், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத ஆசிரியர்கள், கிரிமினல் நடவடிக்கைக்கு ஆட்படாதவர்கள், புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர்கள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படாதவர்கள் மட்டுமே, இடம் பெற வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.