படங்களில் பாடம் சொல்லும் பெரம்பலுார் கே.வி., பள்ளி

பெரம்பலுார்: பெரம்பலுார் கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகம், படங்களில் பாடம் சொல்லும் பள்ளிக்கூடமாக, 'மல்டி கலரில்' ஜொலிக்கிறது. 


பெரம்பலுாரில், மத்திய அரசின் கேந்திரியவித்யாலயா பள்ளி, 2010ல் துவங்கப்பட்டது. ஒன்று முதல், பிளஸ் 2 வரை உள்ள இப்பள்ளியில், 310 மாணவர்கள், 305 மாணவியர் என, 615 பேர் படிக்கின்றனர். முதல்வர் கல்யாணராமன் மற்றும், 18 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

பள்ளி வளாகம் முழுக்க, 'பாலா கான்செப்ட்' என்ற திட்டத்தில், திரும்பும் திசை எல்லாம் கண்களை கவரும் வகையில், மல்டி கலரில் ஓவியங்களும், வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.அவற்றில், இயற்கை விவசாயம், சாலை பாதுகாப்பு, பிளாஸ்டிக்கின் தீமை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

மேலும், இந்திய பிரதமர்கள், சாதனையாளர்கள், தேசிய பறவை மற்றும் விலங்கு, இந்தியா மற்றும் உலக மேப், வாழ்க்கை கல்வி குறித்த ஓவியம், வாசகங்கள், படங்கள் என, பட்டியல் நீள்கிறது.பள்ளி வகுப்பறைகளிலும் பாடங்கள், மொழி தொடர்பான வாசகங்கள், படங்கள் வரையப்பட்டுள்ளன.

வாழ்க்கை ஏற்றத்தாழ்வு நிறைந்தது என்பதை விளக்கும், பரமபதம் ஓவியம், மனிதனுக்கு தீமைகளை ஏற்படுத்தும் போதை பொருட்கள் குறித்து விளக்கும், 10 தலை ராவணன் ஓவியம், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, 'மிக்கி மவுஸ்' பொம்மைகள், காய், கனிகள், பார்லிமென்ட், சட்டசபை, விலங்குகள், பறவைகள் என, ஓவியங்கள் அனைத்தும், தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாமல், பிற பள்ளி மாணவர்களும், அவர்களது பெற்றோரும், பொதுமக்களும், கண்காட்சி போல் இவற்றை கண்டு ரசித்து செல்கின்றனர்.