சென்னை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகளில், இடைநிலை ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளதால், பள்ளிகளில், மற்ற வகுப்புகளுக்கான பாடம் பாதிக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில், பிளஸ் 1 பொதுத் தேர்வு, நேற்று துவங்கியுள்ளது. 2ம் தேதியே, பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கி விட்டது.பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கு, 44 ஆயிரத்து, 500 ஆசிரியர்கள்; பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 41 ஆயிரம் ஆசிரியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணியில், பிளஸ் 2 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தான் ஈடுபடுவர். 10ம் வகுப்பு தேர்வுக்கு, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு எடுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தேர்வுப் பணி வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு பணிகளில், பட்டதாரி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும், இடைநிலை ஆசிரியர்களும், தேர்வுப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அரசு, அரசு உதவி மற்றும் தனியார் என, அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களும், தேர்வுப் பணிக்கு சென்றுள்ளதால், பெரும்பாலான பள்ளிகளில், பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல், பல வகுப்புகள் முடங்கியுள்ளன. 

ஒன்று முதல், 10 வரையுள்ள வகுப்புகளுக்கு, மூன்றாம் பருவம் துவங்கி, ஒரு மாதம் கூட ஆகவில்லை; 75 சதவீத பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளன.இந்நிலையில், அந்த வகுப்புகளின் ஆசிரியர்கள், தேர்வுப் பணிக்கு சென்று விட்டதால், மூன்றாம் பருவ பாடங்களை, மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள், வரும், 31 வரை நடக்க உள்ளதால், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வு வரும் வரை, பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

எனவே, அடிப்படை கல்வி கற்கும் மாணவர்களுக்கு, முறையாக பாடம் நடத்தும் வகையில், இடைநிலை ஆசிரியர்களை, தேர்வுப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.